Home இந்தியா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்க மத்திய அரசு முயற்சி – கருணாநிதி கண்டனம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்க மத்திய அரசு முயற்சி – கருணாநிதி கண்டனம்

561
0
SHARE
Ad

Karunanithiசென்னை, டிசம்பர் 22 – திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அரசை மதச்சார்பற்ற அரசாக நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15-12-2014 அன்று நான் விடுத்த அறிக்கையில், ‘பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும், வேதனையைத் தருவதாகவும்தான் உள்ளன”.

“உதாரணமாக கிறித்தவ பெருமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாகக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பெரு விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நடந்து கொள்ள மத்திய அரசில் சிலர் முயற்சிப்பது தெரிகிறது”.

#TamilSchoolmychoice

“அதாவது மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்து மகாசபைத் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளை “நல்லாட்சி தினம்” என்ற பெயரால் டிசம்பர் 25-ஆம் தேதியன்று, அதாவது கிறிஸ்துமஸ் நாளன்று கொண்டாடுவதற்கு முன்வந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது”.

“அதையொட்டி பா.ஜ.க.வினர், அரசு பள்ளிகளில் அன்றையதினம் கட்டுரை போட்டிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியிருக்கிறது”.

“இதன் காரணமாக டிசம்பர் 25-ஆம் தேதியன்று “கிறிஸ்துமஸ்” விடுமுறை நாள் என்பதை மாணவர்கள் விழாவாக கொண்டாட முடியாத ஒரு இக்கட்டான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது”.

“வேறு சில கட்சிகளின் சார்பிலும் இது பற்றி அறிக்கைகள் வெளிவந்தன. உடனே மத்திய அரசு கிறிஸ்துமஸ் நாளன்று விடுமுறை ரத்து செய்யப்படமாட்டாது என்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்ததது”.

“ஆனால் டிசம்பர் 25-ஆம் தேதியன்று, வாஜ்பாயின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் என்றும், அன்றைய தினம் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வர வேண்டுமென்று மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்வதாகச் செய்திகள் வந்துள்ளன”.

“குறிப்பாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அலுவலர்கள் அன்றைய தினத்தை “பிரதான் மந்திரி கிராம சாலைத் திட்ட தினம்” என்ற பெயரில் கொண்டாடப் போவதாகவும், 2000-ஆம் ஆண்டில் வாஜ்பாயால் துவக்கி வைக்கப்பட்ட கிராமச் சாலைகள் திட்டத்தின் 15-வது ஆண்டு விழாவினை அன்றையதினம் நடத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்”.

“மத்திய அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலா துறையின் இணை அமைச்சர் மகேஷ் சர்மா, டிசம்பர் 25-ஆம் தேதியன்று புதிய திட்டங்கள் தங்கள் துறை சார்பில் தொடங்கப்படும் என்று கூறியிருக்கிறார்”.

“மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் டிசம்பர் 25-ஆம் தேதியன்று நேரு யுவகேந்திரா திட்டத்தின் கீழ் 27 ஆயிரம் இளைஞர்கள் குழுக்களைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்”.

“இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் டிசம்பர் 25-ஆம் தேதியன்று மாரத்தான் போட்டி, ரத்த தான முகாம், கண் சிகிச்சை முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்”.

“மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் இத்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மத்திய அரசின் அலுவலர்கள் இதிலே கலந்து கொள்ள வேண்டுமென்றால், கிறித்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்களா?” அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்களா?”

“எனவே மத்திய அரசு கிறித்தவப் பெருமக்களையும்,சிறுபான்மையினரையும் ஏமாற்றும் இப்படிப்பட்ட செயல்களைக் கைவிட்டு, மதசார்பற்ற அரசாக தொடர்ந்து நடைபெற இனியாவது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என கேட்டுக்கொண்டுள்ளார் கருணாநிதி.