கோலாலம்பூர், டிசம்பர் 24 – கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட “சூப்பர் ஸ்டார்” பாடல் திறன் போட்டி ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இந்த வருடம் 14-ம் ஆண்டை எட்டியிருக்கின்றது.
“சூப்பர் ஸ்டார் 2014-ன்” மாபெரும் இறுதிச் சுற்றில் ஆறு கார்களை வெல்லப்போவது யார்? வெள்ளித்திரை அணியா? அல்லது விண்மீன் அணியா? என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இறுதிச் சுற்றுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மலேசிய மக்களிடையே இந்த கேள்வி குறித்த பரபரப்பு இப்போதே எழத் தொடங்கி விட்டது.
அப்படிப்பட்ட பரபரப்போடும், உற்சாகத்தோடும் தான் அஸ்ட்ரோ நிறுவனத்தில் நடைபெற்ற நேற்றைய செய்தியாளர்கள் கூட்டமும் அமைந்தது.
செய்தியாளர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு நிகழ்ச்சி படைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், இரு அணியிலுள்ள போட்டியாளர்களும் பாடல்களைப் பாடி தங்களுக்குள் சவால்களை விட்டுக் கொண்டனர். இந்த உற்சாகமான நிகழ்வு சில நிமிடங்கள் தொடர, நமக்கு போட்டியின் தீவிரம் புரிந்தது.
“இவர்களை விட்டால் இங்கேயே இறுதிச்சுற்றை நடத்திவிடுவார்கள்” என்று வேடிக்கையாகக் கூறிய அறிவிப்பாளர் டெனிஸ், தனது சாதுர்யமான பேச்சாற்றலால் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இறுதி வரை அறிவிப்பாளர்கள் டேனிஸ், யாமினி இருவரும் தங்களுக்கே உரிய பாணியில் மிக சுவாரஸ்யமாக நிகழ்வை வழி நடத்தினர்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அஸ்ட்ரோ தமிழ் பிரிவின் நிர்வாகி டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கலந்து கொண்டு நிகழ்ச்சி குறித்த முக்கிய அம்சங்களை செய்தயாளர்களுக்குத் தெரிவித்தார்.
அதிரப் போகும் அரங்கம்
இந்த இறுதிச் சுற்றுக்கு அழைக்கப்பட்டிருக்கும் நீதிபதிகள், போட்டியாளர்களோடு சேர்ந்து அந்த அரங்கையே அதிரச் செய்யப்போவது நிச்சயம்.
நீதிபதிகளாக அழகும், திறமையும் வாய்ந்த பாடகி வசுந்தரா தாஸ், நடமாடும் பல்கலைக்கழகம் டி.ராஜேந்தர், ‘ஆனந்தயாழை’ பாடலுக்கு பிலிம்பேர் விருது பெற்ற பாடகர் ஸ்ரீராம்பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஒரு நிகழ்ச்சிக்கு டி.ராஜேந்தர் வருகிறார் என்றால் இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான் காரணம் இன்று பேஸ்புக், டிவிட்டர், யுடியூப் போன்ற நட்பு ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுவதும், பார்க்கப்படுவதும் டிஆரின் காணொளிகள் தான்.
டிஆர் பேசிய நிகழ்ச்சியின் காணொளி வெளியான ஒரு சில நிமிடங்களில் உலக அளவில் நட்பு ஊடகங்களில் பரவலாக பகிரப்படுவது தான் டி.ராஜேந்தர் என்ற மனிதரின் தனிச்சிறப்பு.
அத்தகைய டி.ராஜேந்தர் மலேசியா சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு நடுவராக வருகிறார் என்றால் சும்மாவா? அரங்கம் டிஆர், டிஆர் என்று அதிரப் போவது நிச்சயம்.
வெள்ளித்திரையா? விண்மீனா?
வானவில், வெள்ளித்திரை, விண்மீன் என மூன்று அணிகள் களமிறங்கிய “சூப்பர் ஸ்டார் 2014” நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்கு இரண்டு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஜெயந்தி தலைமை வகிக்க, யோகேஸ்வரி, சிவக்குமார், காயத்ரி, தரனீஸ்வரி, மகேந்திரன் என மொத்தம் 6 பாடகர்கள் அடங்கிய “வெள்ளித்திரை” அணியும், திருச்செல்வம் தலைமை வகிக்க சித்திரைச்செல்வம், சித்தார்தன், ஹரிஹரன், ஐரிஸ், பிரசன்னா என மொத்தம் 6 பாடகர்கள் அடங்கிய “விண்மீன்” அணியும் போட்டியிடவுள்ளனர்.
இந்த இறுதிச்சுற்றில் வெல்லப்போகும் அணிக்கு ஆளுக்கொரு பெரோடுவா அக்சியா காரும், 15,000 ரிங்கிட் ரொக்கமும் வழங்கப்படவுள்ளன.
இரண்டாம் நிலையில் வெற்றி பெறும் அணிக்கு 10,000 ரிங்கிட் ரொக்கமும், 15,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப்பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், அதே மேடையில், மூன்றாம் நிலையைப் பெற்ற வானவில் அணிக்கு 8,000 ரிங்கிட் ரொக்கமும், 7,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப்பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
27-ம் தேதி மாபெரும் இறுதிச்சுற்று:
வரும் டிசம்பர் 27-ம் தேதி, இரவு 8.00 மணியளவில் புக்கிட் ஜாலில் அரங்கத்தில் மாபெரும் இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. இந்த இறுதிச்சுற்றுக்கு நுழைவு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், இந்த இறுதிச்சுற்றை அஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231)-ல் துல்லிய ஒளிபரப்பில் நேரலை நிகழ்ச்சியாகக் கண்டு மகிழலாம்.
செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்