நியூயார்க், டிசம்பர் 25 – சிரியாவில், அமெரிக்கக் கூட்டுப் படைக்குச் சொந்தமான ஜோர்டான் போர் விமானம் ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று சுட்டு வீழ்த்தினர். மேலும், அந்த விமானத்திலிருந்து குதித்த விமானியையும் அவர்கள் சிறைப் பிடித்துள்ளனர்.
இவர்தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட ஜோர்டானிய விமானி முவாத் அல்-கசீபே (ஜோர்டானிய தகவல் இலாகா வெளியிட்ட படம்)
சிரியாவிலும், ஈராக்கிலும் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க இராணுவத்தின் தலைமையில் பல்வேறு நாடுகள் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த இராணுவ நடவடிக்கைகளில் ஜோர்டான் போர் விமானங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் கைப்பற்றி உள்ள இடங்களின் மீது ஜோர்டான் நாட்டு விமானம் இராணுவத் தாக்குதல் நடத்தியது. அப்போது ‘ஹீட் சீக்கிங்’ (Heat Seeking) ஏவுகணை மூலம் ஜோர்டான் விமானத்தை பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இந்தத் தகவலை ஜோர்டான் அரசும், சிரியாவில் இயங்கி வரும் அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளன.
இதற்கிடையே, ஜோர்டான் விமானியை பயங்கரவாதிகள் பிடித்துச் செல்லும் காட்சிகள், வீழ்த்தப்பட்ட விமானத்தில் சிதறல்கள் ஆகியவற்றின் புகைப்படங்களை இணையதளங்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
படங்கள் – EPA