Home கலை உலகம் பாலசந்தர் இறுதி ஊர்வலத்தில் முதன்மை சீடர் கமல் இல்லாத சோகம்

பாலசந்தர் இறுதி ஊர்வலத்தில் முதன்மை சீடர் கமல் இல்லாத சோகம்

806
0
SHARE
Ad

kamal-haasan-balachanderசென்னை, டிசம்பர் 25 – நேற்று நடந்தேறிய இயக்குநர் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்குகளிலும், இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்ட திரையுலகத்தினரிடையே அவரை இழந்த சோகம் ஒருபுறம் பரவிக் கிடந்தாலும், பாலசந்தரின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த முக்கிய நபர் ஒருவர் அந்த நிகழ்வுகளில் இல்லாத குறையையும், வெற்றிடத்தையும் அனைவரும் கண்டிப்பாக உணர்ந்திருப்பர்.

அவர்தான், காலத்தின் கோலத்தால், தனது குருநாதரை இறுதியாகக் காண முடியாமல் அமெரிக்காவில் தொழில் நிமித்தம் சிக்கிக் கொண்ட கமல்ஹாசன்!

கே.பாலசந்தர் உருவாக்கிய எத்தனையோ நட்சத்திரங்களில் முதல் நிலை வகிப்பவர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்!

#TamilSchoolmychoice

அதிலும் குறிப்பாக குழந்தை நட்சத்திரமான கமல் பருவ வயதில் சினிமாவில் நுழைய நின்ற தருணத்தில், அவருக்கு சரியான வழிகாட்டியாகத் திகழ்ந்து ஏறத்தாழ 36 படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து சின்னச் சின்ன பாத்திரங்களில் இருந்து, கதாநாயகன் அந்தஸ்து வரை உயர்த்திக் கொடுத்தவர் பாலசந்தர்.

KB Last rites Prakash Rao
பாலசந்தரின் இறுதி ஊர்வலம்

திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த கமலை நடிப்புத் துறைக்குள் செலுத்தி வெற்றிகாணச் செய்ததில் பாலசந்தருக்கு முக்கிய பங்குண்டு. சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் முதலில் நடிக்க வைத்தார்.

பின்னர், பாலசந்தரின் மன்மதலீலைதான், கமலுக்கு கதாநாயக அந்தஸ்தைக் கொடுத்தது. அதன் பின்னர்தான் முழுக் கதாநாயகனாகவே உலா வரத் தொடங்கினார் கமல்.

அது மட்டுமல்லாமல், கமல்ஹாசனை மரோ சரித்ரா படத்தின் மூலம், தெலுங்கிலும், ‘ஏக் துஜே கேலியே’ மூலம் இந்தியிலும் அறிமுகப்படுத்தி, சாதாரண தமிழ் நடிகராக இருந்தவரை அகில இந்திய நட்சத்திரமாக உச்சத்துக்கு கொண்டு சென்றவர் பாலசந்தர்.

இப்படியாக கமல்ஹாசனை உருவாக்கிய கே.பாலசந்தரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாமல் கமல் அமெரிக்காவில் சிக்கிக் கொண்டதுதான் ஒரு மறக்க முடியாத சோகம்.

இருப்பினும், கே.பி. தனது கடைசி நாட்களை மருத்துவமனையில் எண்ணிக் கொண்டிருந்த தருணங்களில் அவரைப் பற்றி மிகவும் சிலாகித்து, கண்ணீர்க் குரலில் பேசிய காணொளி ஒன்றை கமல் தனது முகநூல் (பேஸ்புக்) மூலமாக வெளியிட்டார்.

அந்த காணொளியின் பாலசந்தருடன் ஓரிரு நிமிடங்கள் பேசினேன் என்றும் கமல் கூறியிருந்தார்.

இன்று நடைபெற்ற பாலசந்தரின் இறுதி ஊர்வலத்தில் தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்தாலும், அங்கே கமல் இல்லாத வெறுமை, சோகம் பரவிக் கிடந்ததை அனைவரும் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள்.