Home கலை உலகம் திரைவிமர்சனம்: கயல் – ஓர் அழகிய காதல் சுனாமி

திரைவிமர்சனம்: கயல் – ஓர் அழகிய காதல் சுனாமி

897
0
SHARE
Ad

??????????????????கோலாலம்பூர், டிசம்பர் 25 – அமைதியாய் இருந்த நெஞ்சை சுனாமியாய் வந்து அள்ளிச் சென்ற காதலைத் தேடி, இரு உயிர்கள் ஜடமாய் அலையும் ஒரு வலி மிகுந்த பயணம் தான் ‘கயல்’.

கயல் அமைதியானவள், எளிமையானவள், முதல் பார்வையிலேயே அசர வைக்கும் அழகு. ஜமீன் வீட்டில் வாழும் ஏழைப் பேரழகி. ஆரோன் அனாதை இல்லத்தில் வளர்ந்தவன், அன்பானவன், வாழ்க்கையைத் தேடி தேசமெங்கும் செல்பவன்.

நமக்கு கிடைக்காத, நாம் அனுபவித்திடாத ஒன்றை நமது தலைமுறைகளாவது அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது மனிதனின் இயல்பு.

#TamilSchoolmychoice

அந்த வகையில், இந்த உலகத்தை ஒரு முறை கூட தனது கண்களால் ரசித்திடாத ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஆரோனின் தந்தை அவனிடம், “மகனே…இந்த உலகத்தை உன் கண்ணாற ரசித்துவிடு…. அந்த ஒளியைப் பார்த்துவிடு” என்று அறிவுரை கூறியதோடு, “என் கண்ணாக நீ இருக்க வேண்டாம்…நீ நீயாக வளரு” என்று அனாதை இல்லத்தில் சேர்த்து விடுகிறார்.

ஆரோன் அந்த ஒளியைப் பார்த்தானா?… அதன் பிரகாசத்தை உணர்ந்தானா? அதை தனக்கே சொந்தமாக்கிக் கொண்டானா? என்பதை ரசிக்க ரசிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

படம் தொடங்கி முதல் 15 நிமிடங்கள், ஆரோனும், அவரது நண்பரும் ஆளுக்கொரு பையைத் தூக்கிக் கொண்டு நாடோடிகளாய் அலைவது போன்ற காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும், அதன் பின் வரும் காட்சிகளில் விறுவிறுப்பு அதிகரித்து நம்மால் படத்துடன் ஒன்றி விட முடிகின்றது.

காசு இல்லையென்று வருபவருக்கு எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வது, எப்போதும் மகிழ்ச்சியாய் துள்ளித் திரிவது, போலீஸ்காரரின் தொப்பையைப் பார்த்து எப்ப சார் டெலிவரி? என்று கேட்பது என ஆரோன் மற்றும் அவரது நண்பராக வரும் சாக்ரடீஸ் கதாப்பாத்திரங்களின் உற்சாகம் படம் பார்க்கும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

அதன் பின்னர், படம் முடியும் வரை காதலால் ஈர்க்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட பல கதாப்பாத்திரங்களை ஆங்காங்கே காண முடிவது பிரபு சாலமனுக்கே உரிய பாணி.

நடிப்பு

Kayal_Movie239

ஆரோன் கதாப்பாத்திரத்தில் புதுமுகம் சந்திரனும், கயல் கதாப்பாத்திரத்தில் ஆனந்தியும், சாக்ரடீஸ் கதாப்பாத்திரத்தில் புதுமுக நடிகர் வின்சென்ட்டும் நடித்திருக்கிறார்கள்.

ஆனந்தி ஏற்கனவே தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் ‘பொறியாளன்’ என்ற படத்தில் நடித்திருந்தவர். ஆனால் ‘கயல்’ படத்திற்குப் பிறகு ஆனந்திக்கு தமிழில் மிகப் பெரிய எதிர்காலம் உண்டு என்பது உறுதி. அந்த அளவிற்கு தனது நடிப்பால் ஈர்க்கிறார்.

சந்திரன் புதுமுகம் என்றாலும், தனது மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“சும்மா கொளுத்து புள்ள… ஒடம்பு தானே எரியும்… உசிரு உங்கிட்ட எப்பவும் பத்திரமா இருக்கும்” என்று கதாநாயகியைப் பார்த்து பேசும் வசனத்தில் சந்திரனின் நடிப்பு நம்மையும் மறந்து கைதட்ட வைக்கின்றது.

சாக்ரடீஸ் கதாப்பாத்திரம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ஆரோனின் நண்பராக படம் முழுவதும் வந்து நம்மை ஈர்க்கிறார். தம்பி ராமையாவை ‘மைனா’ படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிரபுசாலமனின் அடுத்த கண்டுபிடிப்பு தான் இவர். விரைவில் வின்சென்ட் சிறந்த குணச்சித்திர நடிகராக அடையாளம் காணப்படுவார்.

இவர்களைத் தவிர, காதலனுடன் ஓடிப்போன ராசாத்தியின் தந்தையாக நடித்தவர், வயதான ஜமீன்தார், பெரியம்மா, கயலின் பாட்டி, மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி வைத்திருக்கும் போலீஸ் அதிகாரி, லாரி டிரைவர், காதல் பிரிவால் மனநலம் பாதிக்கப்பட்டவர், கன்னியாகுமரி பெண் போலீஸ் என பல கதாப்பாத்திரங்கள் ஆங்காங்கே வந்து நம்மை நெகிழ வைக்கின்றன.

“உசிர உங்கிட்ட குடுத்துட்டு அங்க ஜடமாத் தான் அலைவான். கன்னியாகுமாரிக்கு அடுத்து ஊர் இல்ல தெரியுமா?” என்று கயலுக்கு பாட்டி ஆறுதல் சொல்வது, “வாழ்க்கையில தோத்தவன், தொழில் செஞ்சு நஷ்டமானவன் எல்லாம் எந்திரிச்சுரலாம்மா… ஆனால் காதல்ல தோத்தவன் கட்டையில போய் கண்டமானாலும் எந்திரிக்க முடியாது” என்று லாரி டிரைவர் கூறுவது, “ஒழுங்கா ஊர் போய் சேரு… இல்லை கிழிச்சு கடல்ல போட்ருவாய்ங்க” என்று கயலுக்கு அறிவுரை சொல்லும் பெண் போலீஸ் என படம் முழுவதும் வரும் வசனங்கள் நெஞ்சைத் தொடுகின்றன.

ஒளிப்பதிவு, இசை

20-1419079059-kayal-movie-stills1-600

வி.மகேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம் சேர்த்திருக்கின்றது. காட்சிகள் ஒவ்வொன்றும் பச்சைப் பசேலென்று கண்களில் ஒற்றிக் கொள்ளும் ரகம்.

மைனா, கும்கியைத் தொடர்ந்து கயலிலும் மலை உச்சி, பசுமை பள்ளத்தாக்குகள், கடல் அலைகள் என காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

சுனாமி வருவது போன்ற காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் அவ்வளவு இயற்கையாகக் காட்டப்பட்டுள்ளது. இப்படியும் செயற்கையாய் ஓர் சுனாமி பாதிக்கப்பட்ட நகரத்தையே உருவாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றது ‘கயல்’

கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் நடைபெறும் பொழுது, ஒலிப்பெருக்கியில் “ஆரோன் எங்க இருக்கீங்க.. கயல் இங்க உங்களுக்காக காத்திருக்குறாங்க” என்று கூறப்படுகின்றது. அதைக் கேட்ட ஆரோனும் கூட்டத்தை முண்டியடித்து வேகமாக அங்கு செல்ல முயற்சி செய்கிறார். திடீரென அங்கே காட்சி வெட்டப்பட்டு ஒரு பாடல் வருகின்றது. ஆரோன் ஏன் ஒலிப்பெருக்கி இருக்கும் இடத்திற்கு செல்லவில்லை என்று நமக்கு கேள்வி எழுகின்றது.

மற்றபடி, காதலர்கள் ஒன்று சேர்வார்களா? அல்லது வழக்கமாக பிரபு சாலமன் படத்தில் வருவது போல் யாராவது இறந்து விடுவார்களா? என்று படத்தின் கடைசி 20 நிமிடங்கள் நமக்கு பதைபதைப்பு ஏற்படுகின்றது. இறுதியில் எதிர்பாராத திருப்பம் நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுப்பதை தடுக்க முடியவில்லை.

இமானின் பிண்ணனி இசையும் பாடல்களும், யுகபாரதியின் பாடல் வரிகளும் இனிமை. என்றாலும் முதல் முதலாக கேட்கும் பொழுதே நம்மை கட்டியிழுக்கும் ஈர்ப்பு ஏற்படவில்லை. ஒருவேளை பாடல்கள் கேட்கக் கேட்க பிடிக்கலாம்.

நல்ல கதை, திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவை கொண்ட ‘கயல்’ திரைப்படம், இந்த ஆண்டில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பிரிவுகளில் தேசிய விருதுகள் வாங்கப் போவது நிச்சயம்.

மொத்தத்தில், ‘கயல்’ – ஓர் அழகிய காதல் சுனாமி….

-ஃபீனிக்ஸ்தாசன்