கோலாலம்பூர், டிசம்பர் 25 – அற்புதமான, பரபரப்பான, பாராட்டைப் பெறும் திரைக்கதையைக் கொண்டிருக்கும் படம் மீகாமன். மகிழ் திருமேனி என்ற நல்ல தமிழ்ப் பெயர் கொண்ட, தூய தமிழில் பேட்டிகள் கொடுக்கும் இயக்குநர் – ஒரு கப்பலின் மாலுமி என்ற அர்த்தத்தைக் கொண்ட “மீகாமன்” என்ற தலைப்பில் இந்தப் படத்தைப் படைத்திருக்கின்றார்.
விறுவிறுப்பான, எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட அதே சமயத்தில் தெளிவான திரைக்கதை. கடத்தல்காரக் கும்பலுக்குள் ஊடுருவி வேலை செய்யும் இரகசியப் போலீஸ் படையைச் சேர்ந்த இருவர் – அப்படி இருவர் தங்கள் கூட்டத்தில் ஊடுருவியிருக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு – ஆனால் அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் கடத்தல் கும்பல் என வெகு சுருக்கமாக கதையைக் கூறிவிடலாம்.
ஆனால், அதற்கு பரபரப்பான, விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து, ஆர்யாவுக்கு வெற்றிப் படமாக மாற்றிக் கொடுத்திருக்கின்றார் மகிழ் திருமேனி.
படத்தின் சம்பவங்களே, கதையையும், திருப்பங்களையும் தீர்மானிப்பதால், கதைச் சுருக்கம் படத்தின் சுவாரசியத்தைக் கெடுத்து விடும் என்பதால் சொல்லாமல் இருப்பதே நல்லது. படத்தைப் பார்த்து மகிழுங்கள்!
ஏற்கனவே, “தடையறத் தாக்க” என்ற படத்தின் மூலம் திரையரங்குகளில் அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைத்ததோடு, திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் திருமேனி. இந்தப் படத்திலும் தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கின்றார்.
படத்தின் பலம்
தனிக் கதாநாயகனாக, முழுக்க முழுக்க ‘கமர்ஷியல்’ ரகம் எனப்படும் வர்த்தக ரீதியான ஒரு படத்தை தனது நடிப்பாலும், சண்டைக் காட்சிகளாலும் தன்னாலும் தூக்கி நிறுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றார் ஆர்யா.
அதிகமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் காட்சிகள் இல்லை என்றாலும், பார்வைகளாலும், முக பாவனைகளாலும், காட்சிகளை கவரும் விதத்தில் நகர்த்திச் செல்கின்றார் ஆர்யா. இருந்தாலும், மிகவும் பரபரப்பான கட்டங்களில், அச்சம் கொள்ள வேண்டிய, படபடக்க வேண்டிய தருணங்களில்கூட எந்தவித உணர்ச்சிகளையும் அவர் காட்டாமல் இருப்பது சற்று நெருடுகின்றது.
ஏற்கனவே, மார்ட்டின் ஸ்கோர்சிஸ் என்ற முன்னணி இயக்குநரின் இயக்கத்தில் “டிபார்ட்டட்” (Departed) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்த படத்தின் கதையம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவுக்கே உரிய பாணியில், மும்பாய், கோவா, குஜராத் போன்ற மாநில காவல்துறை, போதைப் பொருள் கடத்தும் கும்பல் என களங்களைத் தேர்ந்தெடுத்துத் திரைக்கதை அமைத்திருக்கின்றார் திருமேனி.
கடத்தல்காரர்களிடையே ஊடுருவியுள்ள காவல் துறை அதிகாரி கதை என்பதால், இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டை, நன்கு ஆராய்ச்சிபூர்வமாக கையாண்டிருக்கின்றார்.
முதலில் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவர்களின் புகைப் படத்தோடும், பெயரோடும் அறிமுகப்படுத்தி வைப்பதால் நினைவில் தங்குகின்றார்கள். ஆனால் பின்னர் அவர்கள் அனைவரையும் திரைக்கதையில் சரியாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்.
வழக்கமாக, ‘பாட்டு போட்டுட்டான்யா’ என சலித்துக் கொள்ளும் தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப் பெரிய ஆறுதல்.
அழகான ஹன்சிகா மோத்வானி வந்தும் என்ன இதுவரை பாடலே இல்லையே என ஏங்க வைத்து விடுகின்றார்கள். இடைவேளைக்குப் பின்னர் ஒரே ஒரு காதல் பாடல்தான். அதை மட்டும் சற்று கிளுகிளுப்பாக படமாக்கியிருக்கின்றார்கள்.
படத்தின் பலவீனங்கள்
படத்தின் திரைக்கதையில் விறுவிறுப்பு, அடுத்த என்ன நடக்கும் என்ற பரபரப்பு என எல்லாம் சரியாக இருந்தாலும், படம் முழுக்க கடத்தல்காரர்கள், காவல் துறை என மாற்றி மாற்றி காட்டிக் கொண்டிருப்பது, படத்தை கொஞ்சம் காய்ந்த பாலைவனம் போல் ஆக்கி விடுகின்றது.
அதிலும், செழுமையான ஹன்சிகாவுக்கு ஓரிரு பாடல்கள் கூட கொடுக்காமல் தமிழ் ரசிகர்களை பரிசோதித்திருக்க வேண்டாம்.
தமிழ்ப் படங்களுக்கே உரிய நகைச்சுவை எங்கேயும் மருந்துக்குக் கூட காணோம். நகைச்சுவை நடிகர்கள் என யாரும் தனியாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, படத்தின் கதாபாத்திரங்களுக்கிடையிலும் கூட நகைச்சுவை உணர்வு மிளிரும் உரையாடல்களோ, சம்பவங்களோ இல்லை.
எல்லோருமே, சீரியசாக வந்து போகின்றார்கள். சிடுசிடுவென்று முகத்தை வைத்துக் கொள்கின்றார்கள்.
நகைச்சுவையும் இல்லை, காதல் பாடல்களும் இல்லை என்னும் போது, எவ்வளவுதான் சிறப்பான திரைக்கதை என்றாலும் – சாதாரண தமிழ் ரசிகனுக்குப் பிடிக்குமா – அவன் திரும்பவும் இரண்டாவது முறையாக படம் பார்க்க வருவானா – என்பதை இயக்குநர் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.
ஆர்யாவுக்கென்றே சில கிண்டல்கள் கேலிகள், சிரித்துக் கொண்டே அவர் செய்யும் சேட்டைகள் – இவைதான் அவரது சிறப்பம்சங்கள். ஆனால், அவையெல்லாம் இதில் கொஞ்சம் கூட இல்லை. அந்த வகையில் அவரை இயக்குநர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும்.
மற்ற தொழில்நுட்ப அம்சங்கள்
இரண்டே பாடல்கள்தான் – அவையும் அவ்வளவாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசையில் சம்பவங்களுக்கேற்றபடி மிரட்டல் இசையைக் கொடுத்துக் கவர்கின்றார், எஸ்.எஸ்.தமன்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமார். படத்தின் பாதி காட்சிகள் மங்கிய மெல்லிய விளக்கொளியில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
படத்தின் இறுதியில் எழுத்துகள் போட்டவுடன் உடனே எழுந்து வெளியே போய்விடாதீர்கள்.
கடைசி ஐந்து நிமிடங்களுக்குள்ளும் படத்தின் இறுதிப் பாக கதையை சாமர்த்தியமாகத் திணித்திருக்கின்றார் இயக்குநர்.
ஆர்யா, ஹன்சிகா இடையிலான காதலை கவிதைத்தனமாக அழகுற கடைசியில் முடித்திருப்பது, வித்தியாச திருப்பம்.
காவல் துறை – கடத்தல்காரர்கள் என இரு தரப்புக்கும் இடையில் நடக்கும் விறுவிறுப்பான, அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான மிரட்டல் திரைக்கதைக்காகவும், இயக்குநரின் புத்திசாலித்தனம் மிளிரும் சம்பவங்களுக்காகவும் மீகாமன் தாராளமாக பார்க்கலாம் – உங்களை ஏமாற்ற மாட்டான்!
-இரா.முத்தரசன்