புது டெல்லி, டிசம்பர் 27 – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், மோடியின் கனவுத் திட்டங்களான ‘டிஜிட்டல் இந்தியா’ (Digital India) மற்றும் ‘மேக் இன் இந்தியா’ (Make In India) திட்டங்களில் தொழில்நுட்ப ரீதியாக ஆதரவு அளிப்பது பற்றி இருவரும் விவாதித்ததாக இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த வருடத்தில் மோடியை சந்திக்கும் மூன்றாவது பன்னாட்டு நிறுவனத் தலைவர் சத்யா நாதெல்லா ஆவார். அண்மையில் பேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க் மற்றும் அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெசாஸ் ஆகிய இருவரும் மோடியைச் சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பாக நாதெல்லா கூறுகையில், ” இந்த நவீன யுகத்தில், ஒவ்வொரு இந்தியனையும் புதிய தொழில்நுட்பத்தில் இணைக்க மிக ஆர்வமாக உள்ளேன். இதுவே இந்தியப் பிரதமரின் எண்ணமாகவும் உள்ளது. அதனால் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா ஆகிய இரண்டு திட்டங்களை பற்றி நாங்கள் சிந்திப்பதுண்டு. ஏனென்றால், இந்த இரண்டு திட்டங்களின் மூலம் நாங்கள் இந்தியாவிற்கு எங்களது சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். மேலும், இந்தியாவில் மைக்ரோசாப்ட் அதிகமான முதலீடுகளை செய்யவும் தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்து 2 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே நாதெல்லா, இந்த வருடத்தில் மட்டும் இரண்டாவது முறையாக இந்தியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.