Home நாடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு கோலாலம்பூரில் ‘திருக்குறள் தூதர்’ விருது

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு கோலாலம்பூரில் ‘திருக்குறள் தூதர்’ விருது

864
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 27 – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு மலேசிய எழுத்தாளர் சங்கம் சார்பில் ‘திருக்குறள் தூதர்’ என்ற விருது கோலாலம்பூரில் வழங்கப்பட உள்ளது. தலைநகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.

Tharun Vijay
தருண் விஜய்

தமிழிசை அறிஞர் சுந்தரேசனார் குறித்த ஆவணப்படம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது. இந்நிகழ்விற்கு தருண் விஜய் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். இதே விழாவில் அவருக்கு எழுத்தாளர் சங்கம் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.

தருண் விஜய், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர்.

#TamilSchoolmychoice

திருக்குறளின் மேன்மை குறித்து இந்திய நாடாளுமன்றத்திலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் எடுத்துக் கூறி வருகிறார். வட இந்தியாவில், இந்து புனித நகரான காசியில் மகாகவி பாரதியார் சில காலம் தங்கியிருந்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

அண்மையில் கவிஞர் வைரமுத்துவும் சென்னையில் தருண் விஜய்க்கு பிரம்மாண்டமான அளவில் பாராட்டு விழா ஒன்றை எடுத்து கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறுகிய கால வருகை மேற்கொண்டு மலேசியா வந்திருக்கும் அவரை கவுரவிக்கும் வகையில் மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் விருது அளிக்கப்பட உள்ளது.

“ஏன் அவருக்கு விருது?” – எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் விளக்கம்

Rajendran-writers-assoc
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன்

தருண் விஜய்க்கு வழங்கப்படும் விருது குறித்து கருத்து தெரிவிக்குமாறு செல்லியல் சார்பில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனை அணுகியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்:-

“தருண் விஜய் குறித்த விவரங்களை நாங்கள் ஆராய்ந்தபோது, அவர் வெறும் அரசியலுக்காகவோ, தமிழக மக்களைக் கவர்வதற்காகவோ, திருக்குறளைப் பற்றி கூறவில்லை என்பதை உணர்ந்தோம். திருக்குறளின மேன்மையை உண்மையிலேயே உணர்ந்துதான் அவர் அவ்வாறு பேசி வருகின்றார். உதாரணமாக, தனது இல்லத்திலேயே, தனது வட்டார மக்களுக்காக திருக்குறளைப் பற்றி மேலும் ஆழமாக அறிந்து கொள்ளும் வண்ணம் வகுப்புகளை நடத்துகின்றார் என்றும் அறிகின்றோம்”

“திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றார். தமிழர் அல்லாத வட இந்தியர் ஒருவர் இதுபோன்ற அறைகூவல் விடுப்பது அண்மையக் காலத்தில் இதுதான் முதன் முறையாகும். இதற்கு முன்னர் மகாத்மா காந்திதான் திருக்குறளின் மேன்மையைப் பற்றி பல கட்டங்களில் எழுதியும் பேசியும் இருக்கின்றார்”

“தருண் விஜய்யின் இதுபோன்ற உன்னத குணநலன்களுக்காகத்தான் கோலாலம்பூர் வருகை தரும் அவருக்கு “திருக்குறள் தூதர்” என்ற விருதை மலேசியத் தமிழர்கள் சார்பில் வழங்கி அவரை கவுரவிக்கவும், அவருக்கு மேலும் உத்வேகம் அளிக்கவும் நாங்கள் முடிவு செய்தோம்” என்று இராஜேந்திரன் செல்லியலிடம் தெரிவித்தார்.

“திருக்குறள் மட்டுமின்றி, தமிழர்களின் சரித்திரம் குறித்தும் அவர் நிறைய தெரிந்து வைத்திருக்கின்றார். அவரிடம் நேரடியாக உரையாடியபோது ஒருமுறை, இந்தியாவிலிருந்து படை திரட்டி, இந்தியாவிலிருந்து கடாரம் போன்ற தூர நாடுகள் சென்று கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டியவன் இராஜேந்திர சோழன் ஒருவன்தான். வேறு எந்த இந்திய அரசரும் அவ்வாறு நாடு விட்டு நாடு சென்று வெற்றிக் கொடி நாட்டியதில்லை என்று தெரிவித்தார்” என்று கூறிய இராஜேந்திரன்,

“இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் நமது நாட்டிற்கு வருகை தரும் அவருக்கு விருது வழங்க முன்வந்துள்ளோம்” என்றும் தெரிவித்தார்.