கிரீஸ், டிசம்பர் 29 – அட்ரியாட்டிக் (Adriatic Sea) கடல் பகுதியில் கிரீஸ் நாட்டிற்கும், இத்தாலிக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த நோர்மன் அட்லாண்டிக் என்ற பெயர் கொண்ட பயணிகள் படகு ஒன்று (ferry) நேற்று நடுக்கடலில் தீப்பற்றி எரிந்தது.
அந்த விபத்தில், கடலில் குதிக்க முயன்ற ஒருவர் மரணமடைந்தார். பலர் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிரடியாக மீட்புப் பணியில் ஈடுபட்ட படையினர், இதுவரை சுமார் 300 பேரை உயிருடன், கடல் வழியாகவும், ஆகாய வழியாகவும் காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் இன்னும் 200க்கும் மேற்பட்டோர் அந்த பயணப் படகில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நோர்மன் அட்லாண்டிக் பயணிகள் படகின் தோற்றம். படகின் மேல் பகுதியில் கார்கள் நிறுத்தப்படும் இடத்தில் முதலில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த தீ படகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கிரீஸ் நாட்டிலிருந்து புறப்பட்ட அந்த பயணிகள் படகு இத்தாலியின் துறைமுக நகரான அன்கோனா நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இத்தாலிய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் பயணிகளை தீப்பற்றி எரியும் படகிலிருந்து மீட்கும் காட்சி. இந்தப் புகைப்படங்களை இத்தாலிய கடற்படை வெளியிட்டது.
நடுக்கடலில் தீப்பற்றி எரியும் பயணிகள் படகின் மேல்தளத்திலிருந்து ஒருவர் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். இருட்டிலும் ஊடுருவிப் பார்க்கக் கூடிய ஒளி பொருந்திய கண்ணாடிகளின் துணையோடு, நேற்று இரவு முழுவதும் கடற்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தீவிபத்தில் சிக்கிய பயணிகள் படகில் இருந்தவர்களின் 49 பேரை சரக்குக் கப்பல் ஒன்று காப்பாற்றியது. பின்னர் காப்பாற்றப்பட்ட பயணிகள் இன்று இத்தாலிய துறைமுக நகரான பாரி (Bari) என்ற இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.
கிரீஸ் நாட்டின் கோர்ஃபு (Corfu) தீவிலிருந்து இருந்து வட மேற்கு பகுதியில், தீவிபத்தால் சிக்கிக் கொண்டுள்ள படகில் இருந்து இன்னும் 200 பேர் மீட்கப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.
படங்கள்: EPA