பெய்ஜிங், டிசம்பர் 30 – கூகுளின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முற்றிலும் முடக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்த சீனா, தற்போது ‘ஜி மெயில்’ (Gmail) சேவையை பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் தடை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகின் மிகப்பெரும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை, சீனாவில் அவ்வளவு எளிதாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியாது.
எனினும், சில தொழில்நுட்ப சேவைகளைப் பயன்படுத்தி சிலர் ஜிமெயிலை அங்கு பயன்படுத்தி வந்தனர். எனினும், கடந்த வெள்ளிக்கிழமை அத்தகையப் பயன்பாடும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம், கடந்த 10 ஆண்டுகளாக, தங்கள் நாட்டின் இணையப் பயன்பாடுகளை கட்டுப்படுத்தவும், தணிக்கை செய்யவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
அந்த முயற்சிகளின் வெளிப்பாடே, கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்ப சேவைகளுக்கான தடை. கூகுள் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட சீனாவிற்கு தனிப்பட்ட காரணங்கள் உள்ளன.
கூகுள் சேவைகள் மற்றும் தகவல் பிரிவுகளில், சீனாவிற்கு எதிரான கருத்துகள் சில பதியப்பட்டுள்ளன. அத்தகைய கருத்துகளை நீக்கும் படி சீனா, பலமுறை கூகுள் நிறுவனத்திடம் கூறியுள்ளது.
எனினும், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக சீனாவின் செயல்பாடுகள் உள்ளது என கூகுள் மறுத்துவிட்டதால், கூகுள் தயாரிப்புகளை முடக்க சீனா பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றது.
இணையம் மீதான தணிக்கை நடவடிக்கைகளுக்கான காரணம் பற்றி சீன அரசு கூறுகையில், “எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு தொழில் நுட்பத்தையும், சேவையையும் நாங்கள் அங்கீகரிக்கமாட்டோம்” என்று கூறியுள்ளது.