பிரேசில், ஜனவரி 03 – பிரேசில் அதிபராக அந்நாட்டின் தற்போதைய அதிபர் தில்மா ரூசெஃப், இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மிகக் கடுமையான போட்டி நிலவியது. இதற்கிடையே, மக்களின் பேராதரவுடன் தில்மா ரூசெஃப் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் அவர் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து ஏழாவது முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பிரேசில் அதிபராகப் பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011-ம் ஆண்டு தில்மா ரூசெஃப் பதவியேற்றதற்குப் பின்பு, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக இல்லை. தற்போது, மீண்டும் அதிபராக பதவியேற்றுள்ள அவருக்கு மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பது பெரும் சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஆசிய தலைவர்களுடன் தில்மா ரூசெஃப் நெருங்கிய நட்பில் இருப்பதால், அவரின் வெற்றியை ஆசிய தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.