கோலாலம்பூர், ஜனவரி 3 – கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளைத் தொடர்ந்து, தனது நிலையை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் மஇகா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் கட்சிப் பொறுப்புகளில் முக்கியமான சில மாற்றங்களை இன்று அறிவித்துள்ளார்.
இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள பழனிவேல், அதிரடியாக கட்சியின் தலைமைச் செயலாளரான ஏ.பிரகாஷ் ராவை நீக்கி விட்டு, டத்தோ ஜி.குமார் அம்மானை புதிய தலைமைச் செயலாளராக நியமித்துள்ளார்.
அதே வேளையில், கட்சியின் வியூக இயக்குநராக செயல்பட்டு வந்த டத்தோஸ்ரீ சா.வேள்பாரியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக கூட்டரசுப் பிரதேசத்தின் பத்து தொகுதி தலைவர் ராமலிங்கம் கிருஷ்ணமூர்த்தியை நியமித்துள்ளார்.
இந்திய சமுதாயத்தின் தூர நோக்கு சிந்தனை மேம்பாட்டுக்காக துடிப்பான, செயல்வேகம் மிக்க புதிய மாற்றங்களை இனி கட்சியில் படிப்படியாகச் செய்யப் போவதாக பழனிவேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்திற்கான குறுகிய கால, மத்திம கால, மற்றும் நீண்ட கால அடிப்படையிலான உத்தேசத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதன் முதல் கட்டமாக இந்த கட்சி பொறுப்பாளர் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் பழனிவேல் கூறியுள்ளார்.
மேலும் 3 புதிய மத்திய செயலவை உறுப்பினர்களை பழனிவேல் நியமித்துள்ளார். பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் மா.கருப்பண்ணன், கெடா மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ கணேசன் சுப்பிரமணியம், காப்பார் (சிலாங்கூர்) மஇகா தொகுதி தலைவர் கணேசன் தங்கவேலு ஆகியோரே அந்த மூவராவர்.
ஏற்கனவே மத்திய செயற்குழுவுக்கு பழனிவேலுவால் நியமனம் செய்யப்பட்டிருந்த டான்ஸ்ரீ டாக்டர் கே.எஸ்.நிஜார், டத்தோ ஆர்.ரமணன், ஜோகூர் டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோருக்குப் பதிலாக இவர்கள் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிலும் மாற்றம்
மஇகாவின் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிஜார் மத்திய செயலவை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதால், இயல்பாகவே, ஒழுங்கு நடவடிக்கைத் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் மா.கருப்பண்ணன் இனி ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகச் செயல்படுவார்.
டத்தோ கணேசன் சுப்பிரமணியம், டத்தோ ரண்டீர் சிங் ஆகிய இருவரும் மஇகா ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக இனி செயல்படுவர்.
இந்த புதிய நியமனங்கள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் பழனிவேல் அறிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் பழனிவேலுவுக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏ.பிரகாஷ் ராவ், டத்தோஸ்ரீ வேள்பாரி, டான்ஸ்ரீ நிஜார், டத்தோ ரமணன், டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த காலங்களில் கட்சிக்காக வழங்கியுள்ள சேவைக்காக அவர்களுக்குத் தனது நன்றியையும் பழனிவேல் தெரிவித்துக் கொண்டுள்ளார்.