கோலாலம்பூர், ஜனவரி 3 – மலாயன் வங்கியும், மலாயன் இஸ்லாமிய வங்கியும் தங்களது அடிப்படை வட்டி விகிதத்தை (Base Rate) 3.20 சதவீதமாக நிர்ணயித்துள்ளன. ‘நிர்ணயிக்கப்பட்ட நிதி’ (Benchmark cost of funds)-ன் அடிப்படையில் இந்த வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டதாக அந்த வங்கிகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மலாயன் வங்கியின் தலைவர் டத்துக் அப்துல் ஃபரித் அலியாஸ் கூறுகையில், “நிர்ணயிக்கப்பட்ட நிதி மற்றும் ‘எஸ்ஆர்ஆர்’ (Statutory Reserve Requirement)-ஐ அடிப்படையாகக் கொண்டு அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது”
“இந்த மாற்றங்கள் மலாயன் இஸ்லாமிய வங்கிக்கும் பொருந்தும். இந்த புதிய கட்டமைப்பின் அடிப்பையில் தனித்த வாடிக்கையாளர்களுக்கான அடிப்படை வட்டி விகிதங்கள், அனைத்து அடமானங்களுக்கும், கடன்களுக்கும், பங்குகளுக்கும் பொருந்தும். எனினும், சில்லறை வாடிக்கையாளர்களுக்கான அடிப்படை கடனளிக்கும் விகிதத்தில் (BLR) எந்த மாற்றமும் இருக்காது.”
“ஜனவரி 2-ம் தேதிக்கு முன்னர் வங்கிக் கடன் தொடர்பாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பழைய வட்டி விகிதங்களிலேயே கடன் அளிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
மலாயன் வங்கி மற்றும் மலாயன் இஸ்லாமிய வங்கியின் வட்டி விகிதங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அந்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.