ஜாகர்த்தா, ஜனவரி 4 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் பயணிகள் ஐந்து பேரின் சடலங்கள், அவர்கள் விமான இருக்கையில் அமர்ந்திருந்த நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டன. ஐந்து பேரும் இருக்கைப் பட்டை (seat belt) அணிந்திருந்ததாக இந்தோனேசிய கடற்படையின் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்களின் உடல்கள் இவ்வாறு விமான இருக்கையுடன்தான் கண்டெடுக்கப்படும் என கருதுவதாக விமானத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“பெரும்பாலான பயணிகளின் உடல்கள் விமானத்திற்குள் தான் இருக்க வேண்டும் என கருதுகிறோம். ஏனெனில் விமானத்தின் உடைந்த பகுதியின் வழியாக வெளியே வந்த உடல்கள்தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன. விமானம் மோசமான வானிலையை எதிர்கொண்டதால் பயணிகள் நிச்சயம் இருக்கைப் பட்டை அணிந்திருப்பார்கள். அதனால் பல பயணிகளின் உடல்கள் அவரவர் இருக்கையில்தான் இருக்கும்,” என்கிறார் விமான போக்குவரத்து நிபுணர் ஜெப்ரீ தாமஸ்.
“இதுவரை 30 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றுள் 5 பேர் இருக்கைப் பட்டை அணிந்த நிலையில், இருக்கையுடன் மீட்கப்பட்டனர்,” என்று இந்தோனேசிய போர்க்கப்பலான புங்டோமோவின் தளபதி (கமாண்டர்) யாகன் சோஃபியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்