ஜகார்த்தா, மார்ச் 18 – கடந்த டிசம்பர் மாதம் ஜாவா கடலில் விழுந்து விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானத்தில் இறந்த பயணிகளில், இன்னும் 56 பேரின் சடலங்கள் மீட்கப்படாத நிலையில், தேடுதல் பணியை நிறைவு செய்வதாக இந்தோனேசியா இன்று அறிவித்துள்ளது.
பயணிகளின் குடும்பத்தினரும் அந்நாட்டு அரசாங்கத்தின் முடிவை சோகத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு, டிசம்பர் 28-ம் தேதி, இந்தோனேசியாவின் சுரபாயா விமான நிலையத்தில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா QZ8501 விமானம், மோசமான வானிலை காரணமாக ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது.
அனைத்துலக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதன் மூலம், விமானிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டெடுத்ததோடு, விமானத்தின் கறுப்புப் பெட்டி உள்ளிட்ட முக்கிய பாகங்களும் மீட்கப்பட்டன.