கோலாலம்பூர், ஜனவரி 20 – விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மேலும் 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்து 5 உடல்களும் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் சனிக்கிழமையன்று ஒப்படைக்கப்பட்டதாக ஏர் ஆசியா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஏர் ஆசியா விமானத்தின் பயணிகள் இருக்கை ஒன்றை மீட்புக் குழுவினர் கொண்டுவருகின்றனர்
இருப்பினும், மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதில் பயணிகளின் உறவினர்களும், மீட்புக் குழுவினரும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கடலில் இருந்து 51 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றுள் 45 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக விமானம் விழுந்ததாகக் கருதப்படும் கடல் பகுதியில் இருந்து சுமார் 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புலாவ் செம்பிலான் என்ற இடத்தில் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதற்கிடையே விமானத்தின் நடுப்பகுதியை மீட்கும் நடவடிக்கை மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்புக் குழு வெளியிட்டது.
வானிலை சீரான உடனேயே மீட்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: EPA