ஜகார்தா, பிப்ரவரி 9 – கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் சிதைந்த பாகங்களிலிருந்து அதன் விமானிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இத்தகவலை இந்தோனிசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையகம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் பம்பாங் சொலிஸ்டியோ கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், விமானத்தின் நடுப்பாகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியிலிருந்து 20 மீட்டர் தொலைவில் விமானிகளின் அறைப்பகுதி சிதைந்து கிடந்ததாக கூறினார்.
இரு விமானிகளின் சடலங்களும் அவர்கள் அணிந்திருந்த சீருடையுடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், விமானிகளின் சடலங்கள் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையிலேயே, இருக்கைப் பட்டையுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“இந்நிலையில் ஒரு விமானியின் உடலை மட்டும் முக்குளிப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். எனினும் அச்சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அது தலைமை விமானியா அல்லது துணை விமானியின் உடலா? என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை. மற்றொரு சடலத்தை மீட்க முக்குளிப்பு வீரர்கள் மீண்டும் முயற்சி மேற்கொள்வர்” என்றார் பம்பாங் சொலிஸ்டியோ.
இந்த விபத்தில் பலியானவர்களில் 101 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.