டாக்லோபன், ஜனவரி 19 – பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோவுக்கு நெருக்கமானவர்கள் பயணம் செய்த விமானம் ஒன்று டாக்லோபன் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.
எனினும் இச்சம்பவத்தின்போது விமானப் பயணிகள் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரி பிரான்சிஸ் டோலன்டினோ தெரிவித்துள்ளார்.
போப்பாண்டவர் பிரான்சிஸ்….
சனிக்கிழமையன்று பிலிப்பைன்சிலிருந்து போப்பாண்டவர் பிரான்சிஸ் தனது வருகையை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார். அவரது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிபர் அகினோவின் சகாக்களை உள்ளடக்கிய விமானமும் புறப்பட ஆயத்தமானது.
“ஓடுபாதையில் சென்ற அந்த விமானம் திடீரென அதிலிருந்து விலகியது. பிறகு அருகிலிருந்து மண் குவியலின் மீது மோதி நின்றதைக் கண்டேன். நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை,” என உள்ளூர் வானொலிக்கு அளித்த பேட்டியில் டோலன்டினோ தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் அதிபர் அகினோவின் செயலாளர், செய்தித் தொடர்பாளர் ஆகியோரும் இருந்தனர். மேலும் ஹையான் புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க டாக்லோபன் நகருக்கு வருகை புரிந்த போப்பாண்டவருடன் வந்திருந்த இவர்கள் இருவருடன் மேலும் சில மூத்த அரசு அதிகாரிகளும் அங்கு வந்திருந்தனர்.
தொடர் மழை காரணமாக தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு போப்பாண்டவர் புறப்பட்டார். அவரது விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னர் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானம் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.