கொழும்பு, ஜனவரி 19 – ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக புதிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இராஜபக்சேவின் ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக உலக நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் குற்றம் சாட்டின. இது குறித்த விசாரணையை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், ராஜபக்சே அதற்கு மறுத்து வந்தார்.
ரணில் விக்கிரமசிங்கே
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், இராஜபக்சே சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து இலங்கை அதிபராக மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் ஐ.நா. விசாரணை குறித்து ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:-
“விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இராணுவ நடவடிக்கைகளின்போது, அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ராஜபக்சே மீதும், அரசின் மீதும் மனித உரிமை மீறல்கள், போர் விதிமுறையை மீறியதாக புகார்கள் எழுந்தன.”
“இது தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ராஜபக்சே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், தற்போது உண்மையை உலகுக்கு தெரியப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. எத்தகைய விசாரணையை நடத்தவும் இந்த அரசு ஐ.நாவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.