இலங்கையில் எதிர்வரும் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடும்ப ஆட்சி, ஊழல், தமிழின மக்கள் படுகொலை போன்ற காரணங்களால் ராஜபக்சேவின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ராஜபக்சேவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால், அவர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முடுவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக, தனது மகன்கள் பயன்படுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 6 பந்தய கார்களை அவர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் வரும் 9 மற்றும் 10-ந் தேதிகளில், இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில், 2 பயணச் சீட்டுகள் ராஜபக்சேவிற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனை முற்றிலும் மறுத்துள்ள ராஜபக்சே இது தொடர்பாக கூறியதாவது:- “நான் பிரபாகரன் காலத்திலேயே நாட்டை விட்டு ஓடாதவன்”.
“இப்போது ஓடிவிடுவேனா? தேர்தல் முடிவுகள் வந்த உடன் அனைத்து விமான நிலையங்களையும் மூடிவிடுவோம் என்று எதிர்க்கட்சியினர் பேசி வருவது நகைப்புக்குரிய ஒன்று” என்று அவர் கூறியுள்ளார்.