கோலாலம்பூர், ஜனவரி 6 – பேஸ்புக் மெசெஞ்சர், நீங்கள் வாய்மொழியாக கூறும் வார்த்தைகளை எழுத்துருக்களாக மாற்றினால் எத்தகைய வியப்பை அளிக்கும்? அத்தகைய வியப்பினை பயனருக்கு ஏற்படுத்தும் முடிவில் பேஸ்புக் தீர்க்கமாக இறங்கி உள்ளது.
திறன்பேசிகளிலும், கணினிகளிலும் தன்னிச்சையான செயலிகளாக பயன்பட்டு வந்த ‘வாய்ஸ் ரிகக்னைஸன்‘ (Voice Recognition) – குரல் அடையாளம் – என்ற தொழில்நுட்பத்தை பேஸ்புக் தனது மெசெஞ்சர் செயலியில் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக, பேஸ்புக், wit.ai என்ற நிறுவனத்தை வாங்கி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் நேற்று நடைபெற்றதாக பேஸ்புக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், பேஸ்புக் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை.
தொடங்கப்பட்டு 18 மாதங்களே ஆன, wit.ai நிறுவனம், திறன்பேசிகளுக்கும், கணினிகளுக்கும் வாய்ஸ் ரிகக்னைஸன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வந்தது. இதன் மூலம் வாய்மொழியாக கூறும் வார்த்தைகளை எழுத்துருக்களாக மாற்றலாம்.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் இந்த தொழில்நுட்பத்தை ஆடம்பர கார்களுக்கான மென்பொருட்களில் ஏற்கனவே மேம்படுத்தி இருந்தாலும், நட்பு ஊடகம் ஒன்றில் இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட இருப்பது இதுவே முதல் முறை. பேஸ்புக் அதனை நிகழ்த்திக் காட்ட உள்ளது.
கடந்த மார்ச் மாதம் பேஸ்புக், மெய்நிகர் (Virtual Reality) கண்ணாடிகள் மற்றும் கருவிகளை உருவாக்கும் ‘அக்குலஸ் விஆர்‘ ( Oculus VR) என்ற நிறுவனத்தை வாங்கி இருப்பதால், சமூக ஊடகத்தின் பயன்பாட்டினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஆயத்தமாகி இருப்பது உறுதியாகி உள்ளது.