கொழும்பு, ஜனவரி 6 – இலங்கையில் அதிபர் தேர்தல் 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருமான மைத்ரிபால சிறீசேனா ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலுக்காக கடந்த சில வாரங்களாக நடந்து வந்த தீவிர பிரச்சாரங்கள் அனைத்தும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதனால் எந்தவித பிரச்சாரத்துக்கும்,
தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளோ, பதாதைகளோ பொது இடங்களிலும், கட்சி அலுவலகங்களிலும் வைப்பதற்கும் நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள நிவிதிகலா பகுதியில் எதிர்க்கட்சியினர் சார்பில் நேற்று இறுதிகட்ட பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்ட மேடையை சில தொண்டர்கள் அலங்கரித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.