சென்னை, ஜனவரி 6 – ‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வலியுறுத்தி, விநியோகஸ்தர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வெளிவந்த படம் லிங்கா. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் தோல்வி அடைந்ததால், படத்தின் வசூல் பாதித்தது.
45 கோடியில் தயாரிக்கப்பட்ட ‘லிங்கா’ படத்தை 220 கோடிக்கு வியாபாரம் செய்துள்ள நிலையில், இழப்பு ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து வேந்தர் மூவிஸ் நிறுவனம், ஈராஸ் நிறுவனம் இரண்டும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘லிங்கா’ படத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஜனவரி 10-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அல்லது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடத்த இருந்த உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதனால் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் விநியோகஸ்தரான மெரினா பிக்சர்ஸின் சிங்காரவேலன் வழக்கு தொடர மனு தாக்கல் செய்துள்ளார். சிங்காரவேலன் தாக்கல் செய்துள்ள மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.