சென்னை – ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்த தெறி படத்திற்கும் பிரச்சினை எழுந்ததால், ‘லாப சதவீத அடிப்படையில் மட்டுமே படங்களை திரையிடுவோம் என, திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், புதிய திரைப்படங்கள் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த தெறி படம், தமிழ் புத்தாண்டு அன்று திட்டமிட்டபடி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
படம் வெளியாகாததற்கு, ‘திரையரங்க உரிமையாளர்களே காரணம்’ என, படத்தின் தயாரிப்பாளர் தாணுவும், ‘தயாரிப்பாளர் தான் காரணம்’ என, திரையரங்க உரிமையாளர்களும் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ‘லாப சதவீத அடிப்படையில் படங்களை தந்தால் மட்டுமே, புதிய படங்களை திரையிடுவோம் என, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், புதிய படங்கள் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு திரையங்கு உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழகத்தில், 1984-இல் 2,600 திரையரங்குகள் இருந்தன. இப்போது, 1,000 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில், படங்கள் அனைத்தும், சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு என, ஒன்பது பிரிவாக பிரித்து வெளியிடப்படுகின்றன.
எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, லாப சதவீத அடிப்படையிலேயே வெளியிடப்பட்டன. அதனால், லாபமோ, நஷ்டமோ தயாரிப்பாளர், திரையங்க உரிமையாளர்கள், இருவரையும் சாரும்.
ஆனால், ஐந்து ஆண்டுகளாக, எம்.ஜி எனப்படும் குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில், படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் நிர்பபந்திக்கின்றனர். இதன்படி, ஒரு படத்திற்கு, 25 லட்சம் முதல், ஒரு கோடி ரூபாய் வரை, தயாரிப்பாளர்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வழங்க வேண்டும். படம் ஓடாமல் நஷ்டம் ஏற்பட்டால், திரையரங்க உரிமையாளர்களே பாதிக்கப்படுவர்.
அவ்வாறு வெளியான நடிகர் ரஜினி நடித்த, லிங்கா படம் திரையங்கு உரிமையாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது. தற்போது, தாணு தயாரித்த, தெறி படத்தையும் குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில் வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டது.
அதற்கு, செங்கல்பட்டு ஏரியாவில் சில திரையரங்க உரிமையாளர்கள் சம்மதிக்கவில்லை. அதனால் தான், தெறி படம் குறிப்பிட்டபடி வெளியாகவில்லை. தயாரிப்பாளர் தாணு படங்களுக்கு மட்டுமே, இதுபோல் பிரச்சினை எழுகிறது. இனி வரும் காலங்களில், லாப சதவீத அடிப்படையில் தரப்படும் படங்களை மட்டுமே திரையிட முடிவு எடுத்துள்ளோம். இந்த நடைமுறை, கோவையில், 100 சதவீதம்; சேலத்தில், 80 சதவீதம் அமலில் உள்ளது.
அடுத்ததாக, செங்கல்பட்டு ஏரியாவில், 100 சதவீதம் நடைமுறைப்படுத்த ஆலோசித்து உள்ளோம். இது தொடர்பாக, அனைவரும் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். படத்தின் தயாரிப்பு செலவை குறைத்தால், இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
இதற்கு நடிகர், நடிகையர், தயாரிப்பாளர் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு படத்தின் மொத்த பட்ஜெட்டில், நடிகர்களுக்கு சம்பளமாக மட்டுமே, 50 – 55 சதவீதம் செலவாகிறது. அடுத்தபடியாக, தொழில்நுட்ப நிபுணர்களின் சம்பளம். மற்றவர்களுக்கு, படம் ஓடினால் தான் வருமானம். இந்த நிலையை மாற்ற வேண்டும் என அவர் கூறினார்.