சென்னை – நேற்று ஒரு நாள் முழுக்க கோலாகலமாக நடந்து முடிந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள், ஒரு திருவிழாவைப் போல் நடந்தேறியதோடு, நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொலைக்காட்சி இரசிகர்களையும் கவர்ந்தது.
நடிகர்கள் ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து தொடக்கி வைத்த இந்தப் போட்டிகளில் எட்டு குழுக்கள் போட்டியிட்டன. ஒவ்வொரு குழுவுக்கும், ஒரு நடிகர் தலைவராகச் செயல்பட்டதோடு, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வணிக நிறுவனம் விளம்பர ஆதரவாளராகச் செயல்பட்டது.
போட்டிகள் தொடங்கியவுடன் சிறிது நேரம் போட்டிகளைக் கண்டு களித்தபின்னர், ரஜினியும், கமலும் புறப்பட்டுச் சென்றனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷண் விருது கிடைத்ததற்காக பாராட்டு விழா எதுவும் நடைபெறவில்லை.
போட்டிகள் இரவு வரை வரை நீண்டதாலும், கலந்து கொண்டிருந்த நடிகர்கள் கிரிக்கெட் விளையாடியதாலும், மற்ற ஏற்பாடுகளைக் கவனித்ததால் ஏற்பட்ட களைப்பினாலும், ரஜினிக்கான பாராட்டு விழா நடத்த முடியவில்லை எனக் கருதப்படுகின்றது.
பின்னர் இரவு மீண்டும் கமலஹாசன் மட்டும் திரும்பவும் வந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் இணைந்து கொண்டார்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்ட பின்னர் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பிரபு ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட கமல் – ரஜினி…
நடிகர்கள் விஜய், அஜித் இருவரும் இந்தப் போட்டிகளில் முகம் காட்டவில்லை. அதற்கான காரணங்களையும் அவர்கள் அறிவிக்கவில்லை.
நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் சூர்யாவின் தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது. இறுதிப் போட்டியில் ஜீவா தலைமையிலான தஞ்சை வாரியர்ஸ் குழுவைத் தோற்கடித்து சென்னை சிங்கம்ஸ் இந்த வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டிகளின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகளையும் நடிகர் சங்கம் பல தரப்புகளிடமிருந்து பெற்றுள்ளது. சன் தொலைக்காட்சி மட்டும் நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியது. மேலும் தனியாக 1 கோடியே 75 இலட்சம் ரூபாயை நடிகர் சங்கத்தின் பணிகளுக்கான சன் டிவி நன்கொடையாக வழங்கியது. நேற்றைய நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளின் நேரலை ஒளிபரப்புக்கான உரிமத்தை சன் டிவிதான் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சன் தொலைக்காட்சி 7 கோடி 25 இலட்சம் ரூபாய் நன்கொடையை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கியது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான 1 கோடி, 75 இலட்சம் ரூபாய் நன்கொடைக்கான மாதிரி காசோலை கமலஹாசனிடம் வழங்கப்படுகின்றது.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட் திருவிழாவில், தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.
ஆந்திராவிலிருந்து நடிகர்கள் பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, வெங்கடேஷ், கர்நாடக சினிமாவிலிருந்து நடிகர்கள் சுதிப், மறைந்த ராஜ்குமார் மகன் சிவராஜ் குமார், நடிகர் அம்ரிஸ், கேரள சினிமாவிலிருந்து நடிகர் மம்முட்டி ஆகியோர் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-செல்லியல் தொகுப்பு