Home Featured தமிழ் நாடு விரும்பிய தொகுதிகளை ஒதுக்காததால் தி.மு.க. மீது காங்கிரஸ் அதிருப்தி!

விரும்பிய தொகுதிகளை ஒதுக்காததால் தி.மு.க. மீது காங்கிரஸ் அதிருப்தி!

707
0
SHARE
Ad

dmkமதுரை – தி.மு.க. கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் தி.மு.க. மீது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தயில் உள்ளனர். விரும்பாத தொகுதிகளாக ஒதுக்கிவிட்டார்கள். காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை முடித்து விட்டு அரசியல் தலைவர்கள் பிரச்சார களத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்கள்.

முன்னதாக கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு 63 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி இருந்தது. அதே போல் இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் போராடிப் பார்த்தது. இதன் பொருட்டு டெல்லியில் இருந்து குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால் காங்கிரஸின் கோரிக்கைக்கு கருணாநிதி செவி சாய்க்கவே இல்லை. காரணம் காங்கிரசில் இருந்து வாசன் தலைமையிலான அணி  பிரிந்து விட்டதால் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி விட்டது என்று நினைத்தாராம் கருணாநிதி.

அதனால் தான் இந்த முறை 35 தொகுதிகளைத் தான் ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக அவர் கூறினாராம். இதனால் வெறுத்துப்போன காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் கருணாநிதியிடம் மன்றாடினார்கள். இதையடுத்து சற்று இறங்கி வந்த தி.மு.க. காங்கிரசுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியது.

இந்த 41 தொகுதிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஆனாலும் கூட காங்கிரஸ் தரப்பில் இன்னமும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கிய 41 தொகுதிகளைப்பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தி.மு.க.விடம் இருந்து விரும்பிய தொகுதிகள் காங்கிரசுக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா  நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில தொகுதிகள் விரும்பிய தொகுதிகளாகவும், பல தொகுதிகள் விரும்பாத தொகுதிகளாகவும் உள்ளது. காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால் தான் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. வேட்பாளர்கள் தேர்விலும் ஒரு சில வேட்பாளர்கள் நமக்கு பிடித்தவர்களாகவும், பிடிக்காதவர்களாகவும் இருக்கலாம் என  சிதம்பரம் பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராகவும் அக்கட்சியைச் சேர்ந்த சிலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.