Home அவசியம் படிக்க வேண்டியவை சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கார் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் – டில்லி காவல் துறை...

சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கார் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் – டில்லி காவல் துறை தலைவர்

785
0
SHARE
Ad

புதுடில்லி, ஜனவரி 6 – கடந்த 2013ஆம் ஆண்டு, ஜனவரி  17ஆம் தேதி இறந்து கிடக்கக் காணப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக புலனாய்வுகள் காட்டுவதாக டில்லி காவல்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் அரசாங்கத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்தவர் சசி தரூர். ஐக்கிய நாட்டு சபையில் உதவிச் செயலாளராகவும் பணிபுரிந்து அனைத்துலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தவர்.

Sashi Tharoor Sunantha
சசி தரூர் மரணமடைந்த சுனந்தா புஷ்கருடன்

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இவர் பின்னர் நாடு திரும்பி காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் இவரது மனைவி புதுடில்லியில் உள்ள லீலா பேலஸ் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டது பலத்த சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.

சுனந்தா இறக்கும் தருவாயில் சசி தரூருக்கும் பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளர் மெஹ்ர் தரார் என்பவருக்கும் இடையில் இருந்த தொடர்புகள் டுவிட்டர் மூலம் பல செய்திகள் அனுப்பியிருந்தார்.

2010ஆம் ஆண்டின் இறுதியில் தரூர் சுனந்தாவை திருமணம் செய்திருந்தார். இருவருக்குமே அது மூன்றாவது திருமணமாகும்.

காங்கிரஸ் அரசாங்கம் பதவியில் இருந்தபோது, வெளியான முதல் கட்ட புலனாய்வுகளின்படி சுனந்தாவின் மரணம் தற்கொலைதான் என்பது போன்ற முடிவுகள் வெளியிடப்பட்டாலும் அவரது மறைவைப் பற்றிய மர்மங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

இந்நிலையில், டில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸ்ஸி “அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் ஆய்வு முடிவுகள் சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் அவர் விஷம் வைக்கப்பட்டதால் மரணமடைந்துள்ளார்” என்றும் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்த அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருவதாகவும், விஷம் வலுக்கட்டாயமாக அவருக்கு கொடுக்கப்பட்டதா அல்லது அவரது உடலுக்குள்  செலுத்தப்பட்டதா என்பது குறித்தும், எந்த மாதிரியான விஷம் அவரைக் கொன்றது என்பதும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் பாஸ்ஸி கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் தடயவியல் நிபுணர் டாக்டர் சுதிர் குப்தா, சுனந்தாவின் மரணப் பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதித் தரும்படி தான் வற்புறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.