Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணியின் வீழ்ச்சி – அன்றே எச்சரித்தார் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

நம்பிக்கைக் கூட்டணியின் வீழ்ச்சி – அன்றே எச்சரித்தார் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

1089
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2018-ஆம் ஆண்டு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்த பின்னர், அடுத்த சில நாட்களில் கோலாலம்பூருக்குப் பறந்து வந்தார் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் (படம்).

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் காங்கிரஸ் ஆட்சியின் போது, இந்திய வெளியுறவுத் துறையின் இணை அமைச்சராகப் பணியாற்றியவர். அதற்கு முன்பாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உதவிச் செயலாளராகப் பணியாற்றியவர். ஒரு கால கட்டத்தில் ஐ.நா.வின் அடுத்த தலைமைச் செயலாளராகக் கூட வரக் கூடும் எனக் கணிக்கப்பட்டவர். ஆற்றலும் அறிவும் படைத்தவர் என்றும் பாராட்டப்பட்டவர் சசி தரூர்.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் கோலாலம்பூர் வந்து தனது பழைய நண்பர்களைச் சந்தித்தவர் அன்வார் இப்ராகிமையும் சந்தித்தார். 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருந்தாலும், குலையாத மன உறுதியை அன்வார் இப்ராகிம் கொண்டிருக்கிறார் என்றும் பாராட்டினார்.

#TamilSchoolmychoice

தனது சந்திப்புகளுக்குப் பின்னர் தனது அரசியல் பார்வையை வெளியிட்டார் சசி தரூர். “60 ஆண்டுகால ஆட்சியை மாற்றியதற்காக ஒரேயடியாக மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். இதே போன்ற காட்சியை 1977-இல் இந்தியாவும் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தபோது பார்த்தது. ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஜனதா கட்சி கூட்டணி சிதறி ஆட்சியும் கவிழ்ந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. எனவே அந்த சம்பவங்களை மறந்து விடாதீர்கள்” என எச்சரித்தார் சசி தரூர்.

ஆச்சரியம் என்னவென்றால், 2018-இல் ஆட்சிக்கு வந்த நம்பிக்கைக் கூட்டணி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய சரியாக இன்னும் இரண்டே மாதங்கள் இருக்கும்போது சசி தரூர் எச்சரித்தது போலவே நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்திருக்கிறது – அல்லது கவிழ்க்கப்பட்டிருக்கிறது.

சசி தரூரின் அன்றைய அறிக்கையை செல்லியலும் வெளியிட்டிருந்தது. பொருத்தமான இந்த நேரத்தில் சசி தரூர் வெளியிட்ட அந்த அறிக்கையை மீண்டும் செல்லியலில் பதிவேற்றம் செய்கிறோம்.

அந்த செய்தியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

“1977 ஜனதா சம்பவங்களை மறக்காதீர்கள்” – பக்காத்தானுக்கு சசி தரூர் எச்சரிக்கை