கோலாலம்பூர் – கவிழ்க்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் பிரதமர் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த செனட்டர் பொன்.வேதமூர்த்தி, அரசுப் பதவி இல்லாத நிலையிலும் சமூக நலம் சார்ந்த தனது பணிகளை வழக்கம்போல தொடர்வேன் என்று மலேசியர்கள் அனைவருக்கும் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.
“ஏராளமான பணிகளும் திட்டங்களும் நிலுவையில் உள்ளன. இருந்தபோதும் உண்மையாகப் பாடுபட்டு அந்தப் பணிகளை நிறைவேற்ற முடிந்தவரை பாடுபடுவேன்” என்றும் உறுதி கூறிய வேதமூர்த்தி “என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய துன் மாகாதீருக்கு இந்த வேளையில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவரின் தலைமையில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை பெரிதும் போற்றுகிறேன்” என்றும் கூறினார்.
“என் பொறுப்பில் இருந்த ஒற்றுமைத் துறை, மித்ரா, பூர்வகுடி மக்கள் மேம்பாட்டுத்துறையான ஜக்கோவா ஆகியவை மக்கள் தொடர்புடைய அமைப்புகளாக எந்நேரமும் உணர்வுப் பூர்வமாகவும் இயங்கக் கூடியவை. இவற்றின் மூலம் பல இன மக்களுடனும் நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதேவேளை, ஏராளமானவர்கள் என்னை நன்கு புரிந்துகொள்ளவும் நானும் பல தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்படவும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, அரசாங்க மூத்த அதிகாரிகளுடனும் பொதுச் சேவைத் துறை ஊழியர்களுடனும் ஆழமான நட்பை வளர்க்க நல்வாய்ப்பு ஏற்பட்டது; அதைவிட பொதுச்சேவைக்கும் சமூகத்திற்குமான ஒரு புரிதலும் அனுபவமும் ஒருசேரக் கிடைத்தன என்றால் அதில் மிகை இல்லை” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
“அனைத்துத் தரப்பினருக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவை இன்னும் வலிமையான – சிறந்த நாடாக உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றும் கூறியுள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்.ஏ.பி.) தலைவருமான பொன்.வேதமூர்த்தி, நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மொகிதின் யாசினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பது குறித்த சர்ச்சையின் அடிப்படையில், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை பிரதமர் உடனடியாகக் கூட்டவேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இந்த பிரச்சினையைத் திருப்திகரமாக தீர்க்க இந்த வாரத்திற்குள்ளாக அவசர நாடாளுமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும்படி பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். மக்களின் மனதில் தோன்றியுள்ள குழப்பத்தை போக்க தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.