கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்குகள் மீது தனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று சர்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ கூறியுள்ளார்.
1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பற்றி தனது கருத்துக்களை நஜிப்பிற்கு தாம் தெரிவித்திருந்தாலும், இறுதியில் முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று ஜோ லோ கூறினார்.
இது 2015-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதியன்று அபுதாபியில் விசாரிக்கப்பட்டபோது ஜோ லோ எம்ஏசிசிக்கு அளித்த அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நஜிப்பின் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையின் போது வழங்கப்பட்டது.
“இந்த ஐந்து கணக்குகளுக்கான அனுமதி அல்லது அணுகல் எனக்கு இல்லை.”
“இந்த ஐந்து கணக்குகளையும் சரிபார்த்து நிர்வகிக்க அதிகாரம் உள்ளவராக நான் இல்லை.”
“அந்த நேரத்தில், இந்த கணக்குகள் பிரதமருக்கு (நஜிப்) சொந்தமானதா என்பது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை” என்று அவர் கூறினார்.
எஸ்ஆர்சி வழக்கின் விசாரணையின் போது, நிக் பைசல் அரிப் காமில் மற்றும் ஜோ லோ ஆகியோரிடமிருந்து நஜிப்பின் கணக்குகள் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பெற்றதாக அம்பேங்க் அதிகாரி ஜோஹான்னா யூ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
2014-ஆம் ஆண்டில் ஹவாயில் உள்ள ஓர் ஆடம்பர கடையில் நஜிப்பின் கடன் பற்று அட்டை பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டபோது, தொலைபேசி உரையாடலின் அடிப்படையில், ஜோ லோ நஜிப்பின் குடும்பத்தின் சார்பாக அம்பேங்கைத் தொடர்புகொண்டதன் மூலம் அவரின் தலையீடலை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஜோ லோ தாம் நஜிப்பின் கடன் பற்று அட்டையை நிர்வகிப்பதாகக் கூறிய குற்றச்சாட்டை மறுத்தார்.
“எனக்குத் தெரிந்தவரை, அம்பேங்கின் பிளாட்டினம் அட்டைதாரர்கள் XXXX-XXXX-XXXX-5496 மற்றும் XXXX-XXXX-XXXX-8961 யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டு கடன் பற்று அட்டைகளின் செலவுகள் மற்றும் கொடுப்பனவுகளை நான் நிர்வகிக்கவில்லை.”
“இந்த கணக்குகளுக்கு எனக்கு அனுமதி அல்லது அணுகல் இல்லை. பிரதமரிடம் எத்தனை அம்பேங்க் கடன் பற்று அட்டைகள் உள்ளன என்று எனக்குத் தெரியவில்லை. அவருடைய செலவுகளை நிர்வகிக்க எனக்கு ஆணை இல்லை.”
“எனக்குத் தெரிந்தவரை, அவருடைய கடன் பற்று கொடுப்பனவுகள் அல்லது அந்தக் கணக்கில் சென்ற வருமான ஆதாரம் பற்றி எனக்குத் தெரியாது.”
“1எம்டிபி அல்லது எஸ்ஆர்சி பணம் அந்தக் கணக்குகளில் போடப்பட்டதா என்பதும் எனக்குத் தெரியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனலில் இருந்து 42 மில்லியன் ரிங்கிட் நிதி சம்பந்தப்பட்ட பண மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை நஜிப் தற்போது எதிர்கொண்டுள்ளார்.