Home தேர்தல்-14 சசி தரூர்: “10 வருட சிறை அன்வாரின் உணர்வுகளை உடைத்தெறியவில்லை – ஆச்சரியப்பட்டேன்”

சசி தரூர்: “10 வருட சிறை அன்வாரின் உணர்வுகளை உடைத்தெறியவில்லை – ஆச்சரியப்பட்டேன்”

1967
0
SHARE
Ad
சசி தரூர் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சசி தரூர் மலேசியாவுக்கு வருகை தந்து உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மற்றும் பிகேஆர் கட்சியின் பொதுத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

சசி தரூர் ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் உதவி செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய அனுபவமும் வாய்ந்தவர். சிறந்த எழுத்தாளரான அவர் இதுவரையில் 17 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

மொகிதின் யாசின்

“தற்போதைய மலேசிய அரசாங்கம் இரண்டு முன்னாள் துணைப் பிரதமர்களை அங்கமாகக் கொண்டிருக்கிறது. ஒருவர் மொகிதின் யாசின், இப்போது உள்துறை அமைச்சராக இருக்கிறார். மற்றொருவர் அன்வார் இப்ராகிம். அவரை எனது ஐக்கிய நாடுகள் பதவியில் இருந்த காலகட்டத்திலேயே நான் அறிவேன். பொதுத் தேர்தல் வெற்றி, சிறையிலிருந்து விடுதலை, அரசியலில் மீண்டும் உயிர்த்தெழுந்தது ஆகிய நிலவரங்களுக்கு மத்தியில் அவர் எனது சந்திப்புக்கு 50 நிமிடங்கள் ஒதுக்கினார். சந்திப்பின்போது அவரது முழு கவனத்தையும் எனது சந்திப்பின் மீது செலுத்தினார். மொகிதின், அன்வார் இருவருமே தங்களுக்கு முன்னர் இருக்கும் சவால்களை அறிவர். தங்கள் முன் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உறுதியோடு இருக்கின்றனர். எதிர்காலம் சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்பதிலும் இருவரும் ஒருமுகமாக இருக்கின்றனர்” என சசி தரூர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் எதிர்க் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றிருப்பது குறித்து நேற்று மே 24 எழுதி இணைய ஊடகங்களில் பதிவேற்றியிருக்கும் கட்டுரையில் மேற்கண்ட கருத்துகளை சசி தரூர் தெரிவித்திருக்கிறார்.

அன்வார் குறித்து ஆச்சரியம்

விடுதலையான பின்னர் செராஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அன்வார்

“பத்து வருட சிறைத் தண்டனை அன்வாரின் உணர்வுகளை கொஞ்சமும் உடைத்தெறிய முடியவில்லை என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். உற்சாகமிக்க ஆற்றலோடு, அமைதியையும் பொறுமையையும் அவர் வெளிப்படுத்திய விதம் கண்டும் நான் ஆச்சரியப்பட்டேன். தனது நீண்ட காலப் பயணத்திற்கு அவர் தயாராக இருப்பதையும் நான் கண்டு கொண்டேன். சிறையிலிருந்து வெளியான கொஞ்ச காலத்திற்குள்ளாகவே, தனக்கென ஒரு வேலைப் பளு மிக்க சந்திப்பு அட்டவணையை நிர்ணயித்துக் கொண்டு, அந்த நேரத்திற்குள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து வருபவர்களைச் சந்திக்கும் அவரது ஆற்றல் – அதனையும் தணிந்த, அமைதியான சூழலில், சிறந்த மரியாதையான நடத்தையோடு எதிர்கொள்வது – இவையெல்லாம் அந்த மனிதரைப் பற்றிய நிறைய விஷயங்களையும், அவரது தன்னம்பிக்கையையும் நமக்கு எடுத்துக் கூறுகிறது” என்றும் சசி தரூர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

“அன்வாரின் இன்றைய அரசியல் நண்பர்கள், கூட்டணிப் பங்காளித்துவ நண்பர்கள், ஒரு காலத்தில் அவருக்கு நியாயமாக நடந்து கொண்டவர்களோ, அவர் மீது அனுதாபத்துடன் நடந்து கொண்டவர்களோ கிடையாது. ஆனால் தனது பழைய காயங்களை மறப்பதற்கான தருணம் இது மாறாக அவற்றைக் கிளறிப் பார்க்கும் நேரமல்ல என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். பிளவுகள் மிகவும் சுலபமாக மீண்டும் தோல்விக்குக் கொண்டு செல்லும் என்பதையும் அவர் 1977-இல் இந்தியாவில் நடந்த அரசியல் சம்பவங்களின் மூலம் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார். தனது அரசியல் பங்காளிகளும் அதனைப் படித்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்” என சசி தரூர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

-செல்லியல் தொகுப்பு