கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் தவிர்க்க முடியாத முக்கியமான போராளி அதன் உதவித் தலைவர் ரபிசி ரம்லி. மிகவும் பிரபலமானவர். அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் இளைஞர். அன்வார் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்.
ஆனால், அவர் மீது விதிக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையைத் தொடர்ந்து நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் இரண்டு தவணைகளாக அவர் தற்காத்து வந்த பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் அவரால் போட்டியிட முடியவில்லை.
தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து ரபிசி செய்திருக்கும் மேல்முறையீடு எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (கோர்ட் ஆப் அப்பீல்) விசாரணைக்கு வருகிறது.
1எம்டிபி கணக்கறிக்கையின் சில விவரங்களை வெளியிட்டதற்காக ரபிசி அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஆனால் இப்போது புதிய பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அந்த 1எம்டிபி கணக்கறிக்கையை அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் இருந்து அகற்றி பகிரங்கமாக்கியுள்ளது.
இதன் காரணமாக அவர் விடுதலை செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அதே வேளையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மீட்டுக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன.
அவ்வாறு ஜூன் 1-ஆம் தேதி ரபிசி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டால், மீண்டும் அவர் ஏதாவது ஓர் இடைத் தேர்தலில் போட்டியிடக் கூடும்.
அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசாராக அவர் கொண்டு வரப்படுவதற்காகத்தான் அஸ்மின் அலி மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற ஆரூடமும் கூறப்படுகிறது.
அஸ்மின் அலியும், ரபிசி ரம்லியும் இணைந்து அரசியல் பங்காற்ற வேண்டும் என அண்மையில் அன்வார் இப்ராகிம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.