நியூ யார்க், ஜனவரி 10 – பில் கேட்ஸ் உலக அளவில் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தாலும், தனது எளிய அணுகுமுறையாலும், சமூக உணர்வுகளாலும் பலருக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
அவரின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் மிகக் பிரபலமான ஒன்று. இந்நிலையில், நீர் ஆதாரங்கள் அழிந்து வருவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுவதற்கும், புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காகவும் மனிதக் கழிவுகளை சுத்திகரித்து, அதிலிருந்து உற்பத்தி செய்த குடிநீரை பருகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
அமெரிக்காவின் சியேட்டலை மையமாக கொண்டு செயல்படும் ஜானிக்கி உயிரிசக்தி நிறுவனம், மனிதக் கழிவுகளில் இருந்து குடிநீரை தயாரிக்கும் ‘ஆம்னிபிராசஸ்சர்’ (Omniprocessor) என்ற முறையை கண்டுபிடித்துள்ளது.
இதன் முதல் சோதனை முயற்சி செனகலில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து அறிந்த பில் கேட்ஸ், தனது தன்னார்வ தொண்டு நிறுவனமான பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக நிதி உதவி செய்ய முடிவு செய்தார். மேலும், அதனை பிரபலப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டார்.
அதன் முதல் முயற்சியாக மனிதக் கழிவுநீரை சுத்திகரித்து அதலிருந்து தயாரிக்கப்பட்ட குடிநீரை பில் கேட்ஸ் பருகினார். அதனை காணொளியாக்கி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கிறது. இதற்கு முன் நான் பருகி வந்த குடிநீரை விட இதுவே சிறந்ததாக இருக்கிறது. தினமும் இதனை பயன்ப்படுத்த நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த பரிசோதனை முயற்சி குறித்து பீட்டர் ஜானிக்கி கூறுகையில், “உலக அளவில் 748 மில்லியன் மக்களுக்கு சரியான அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. ஆண்டுதோறும் 700,000 குழந்தைகள் கழிவுகளை சரியாக சுத்திகரிக்காததால், நோய்வாய்பட்டு இறக்கின்றனர்”.
“இந்த அவநிலையை போக்கவே இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார். ஜானிக்கியின் புதிய முயற்சியும், அதனை ஊக்குவித்த பில் கேட்ஸின் உணர்வுகளுக்கும் உலக அளவில் பாராட்டுகள் குவிகின்றன.
பில் கேட்ஸின் காணொளியைக் கீழே காண்க: