டெட்ராய்ட், ஜனவரி 17 – எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள், எதிர்காலத்தில் எரிபொருள் ஆதாரங்கள் தீர்ந்து போகும் என்ற அச்சம் – இவற்றின் காரணமாக மின்சக்தி மூலம் இயங்கும் கார்களின் உருவாக்கமும், அது தொடர்பான தொழில் நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.
அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், அதிவேக மின்சாரக் கார் ஒன்றை – ‘செவ்ரோலெட் போல்ட்’ (Chevrolet Bolt)- என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒருமுறை இந்தக் காரின் மின்கலத்தை (பேட்டரி) மின்சக்தி மூலம் செறிவூட்டினால் (சார்ஜ்) செய்தால், 200 மைல் பயணிக்கக் கூடிய திறன் கொண்ட இந்த கார், அடுத்த வருடம் முதல் அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த காரின் விலை சுமார் 30,000 அமெரிக்க டாலர்கள் அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பரா கூறுகையில், “மிகச் சரியான தருணத்தில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போல்ட் ரக கார்கள் விற்பனைக்கு வரும் பட்சத்தில், அனைவரின் விருப்பமாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்
எனினும் மேரி பரா, இந்த கார் உலக சந்தைகளுக்கும் விற்பனைக்கு வருமா அல்லது அமெரிக்காவில் மட்டும்தான் விற்பனை செய்யப்படுமா என்பது பற்றி தெரிவிக்கவில்லை.
படங்கள்:EPA