புதுடில்லி : அமெரிக்காவின் மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா இந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் கால் பதிக்கிறது.
வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக டெஸ்லா கருதப்படுகிறது.
பிப்ரவரி மாதம் தொடங்கி புதிய கார்களுக்கான முன் பதிவுகள் தொடங்கும் என்றும் அதைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் வாகனங்களின் விநியோகம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அறிமுகமாகும் “மாடல் 3 செடான் (Model 3 Sedan) இரக காரின் விலை சுமார் 55 முதல் 60 இலட்சத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வருகையின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வருகை தந்தார். அதைத் தொடர்ந்து டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்கும் படலங்கள் தொடங்கின.
டெஸ்லா மாடல் 3 என்ற கார் இரகம் அனைவராலும் வாங்கப்படும் விலையில் அமைந்திருக்கிறது. முதன் முதலாக 2017-இல் இந்தக் கார் அறிமுகம் கண்டது. உலகிலேயே மிக அதிகமாக விற்பனையாகும் மின்சாரக் காராக இது கருதப்படுகிறது. சுமார் 15 நிமிடங்களுக்குள் இந்தக் காரில் மின்சக்தி ஏற்றப்பட முடியும்.
இந்த ரகக் கார்தான் இந்தியாவிலும் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவிருக்கிறது.
இந்தியாவில் சொந்த கார் தயாரிப்புத் தொழிற்சாலையை நிர்மாணிக்கும் முயற்சியிலும் டெஸ்லா ஈடுபட்டிருக்கிறது.