கோலாலம்பூர் : தற்போது ஆட்சியில் இருக்கும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தை அகற்றி புதிய அரசாங்கத்தை நிர்மாணிக்க அம்னோ உள்ளிட்ட அனைத்து அரசியல் சக்திகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
இதற்காக நம்பிக்கை கூட்டணி இரண்டு முனைகளிலான அரசியல் வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
அம்னோவின் பல்வேறு தரப்புகள் தேசியக் கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என அடுத்தடுத்து அறைகூவல்கள் விடுத்து வருவது குறித்து அன்வார் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நாட்டின் அரசியல் நிலைமை மிகவும் வெப்பமான கட்டத்தை அடைந்திருப்பதாக அவர் மேலும் கூறினார்
நம்பிக்கை கூட்டணியின் கொள்கைகளான சிறந்த நிர்வாகம், அதிகார விதிமீறல்கள், எதிரான நடவடிக்கை, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த ஒரு தரப்புக்கும் நம்பிக்கை கூட்டணியின் கதவுகள் திறந்திருப்பதாக அன்வார் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹரப்பான் பிளஸ் என்ற பெயரில் மாபெரும் எதிர்க்கட்சிக் கூட்டணியைத் தோற்றுவித்து அதன் மூலம் மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை நிலைநாட்ட அன்வார் இப்ராகிம் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார்.