Home One Line P1 “தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” – பூலாய் அம்னோ அறைகூவல்

“தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” – பூலாய் அம்னோ அறைகூவல்

442
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஆளும் தேசிய கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என ஜோகூர் மாநிலத்தின் பூலாய் அம்னோ தொகுதி அறைகூவல் விடுத்திருக்கிறது. பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் அதன் மகத்துவமும் வலிமையும் பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் அம்னோ பூலாய் தொகுதி தலைவர் நூர் ஜஸ்லான் இந்த அறைகூவலை விடுத்திருக்கிறார்.

“தேசியக் கூட்டணி தற்போது விரிசல் கண்டிருக்கிறது. எனவே அங்கே இருந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு இப்போதே வெளியேறுவதுதான் சரியான முடிவு” என அவர் மேலும் கூறினார்.

“தேசியக் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கை இல்லை. ஒரு சிறிய கட்சி ஒரு பெரிய கட்சியான அம்னோ என்ன செய்ய வேண்டும் என ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசாங்கமாகத்தான் செயல்படுகிறது. 30-க்கும் மேற்பட்ட அம்னோ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் தேசியக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது” என்றும் நூர் ஜஸ்லான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று வெள்ளிக்கிழமை ஜனவரி 1ஆம் தேதி பூலாய் தொகுதியின் மகளிர் பிரிவு கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

ஜோகூர் மாநில துணைத் தலைவருமான நூர் ஜஸ்லான் “எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அம்னோ தேசியக் கூட்டணியைத் தொடர்ந்து ஆதரிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள அம்னோ தொகுதிகளும் இது போன்ற தீர்மானங்களை முன்மொழியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

“நடப்பு அரசாங்கம் மக்களுக்கு நன்மையான பணிகளை செய்யும்போது அதன் பெருமை எல்லாம் மொகிதின் யாசின் தலைமைத்துவத்திற்கு சென்று சேர்கிறது. ஆனால் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழும்போது அவை அம்னோவைப் பாதிக்கிறது” எனவும் அவர் கூறினார்.

நூர் ஜஸ்லான் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
கடந்த 2018 பொதுத் தேர்தலில் அவர் பூலாய் நாடாளுமன்ற தொகுதியைத் தற்காப்பதில் தோல்வி கண்டார்.

அமானா கட்சியின் துணைத் தலைவரான சாலாஹூடின் அயூப் பூலாய் தொகுதியில் வெற்றி பெற்றார்.

15-வது பொதுத் தேர்தல் நடந்தால் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியையோ அதன் கீழ் வரும் கெம்பாஸ் சட்டமன்ற தொகுதியை அம்னோ ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.