Home One Line P1 சிங்கை மலேசியா துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டது

சிங்கை மலேசியா துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டது

630
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூர் மலேசியாவுக்கும் இடையிலான துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கை பிரதமர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் இருவரும் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் எச்எஸ்ஆர் (HSR – High Speed Rail) எனப்படும் இந்தத் திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை 31 டிசம்பர் 2020 உடன் முடிவுக்கு வருவதால் இந்தத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மலேசியாவின் பொருளாதார சூழலை கொவிட்-19 தொற்று பெரிதும் பாதித்து இருப்பதாலும் இந்த துரித ரயில் திட்டத்தில் அரசாங்கம் பல்வேறு மாற்றங்களை செய்து இருப்பதாலும் இந்தத் திட்டத்தை மேலும் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அந்த கூட்டறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இருதரப்பு அரசாங்கங்களும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னரும் இந்த மாற்றங்கள் குறித்த ஒருமித்த கருத்தை அடைய முடியாததால் இந்த உடன்படிக்கையை இரத்து செய்வதாக இரண்டு அரசாங்கங்களும் அறிவித்திருக்கின்றன.

இந்தத் திட்டத்தைக் கைவிடுவதால் மலேசிய அரசாங்கம் சிங்கை அரசாங்கத்திற்கு நஷ்ட ஈடு தரவேண்டும். அது எவ்வளவு என்பது இனி முடிவு செய்யப்படும்.

ஏற்கனவே வெளிவந்த தகவல்களின்படி இந்தத் திட்டம் கைவிடப்பட்டால் மலேசியா 500 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா இதே தொகையை சிங்கப்பூருக்கு செலுத்த வேண்டியதிருக்குமா அல்லது இந்தத் தொகையில் மாற்றம் இருக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

பின்னர் மலேசிய அரசாங்கத்தின் சார்பில் தனிப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிரதமர் துறை அமைச்சர் முஸ்தபா முகமட் “கொவிட்-19 பிரச்சனைகள் நாட்டைக் கடுமையாகப் பாதித்திருப்பதால், இந்த திட்டத்தை மேற்கொண்டு தொடர்வது மிகுந்த சிரமம்” எனத் தெரிவித்தார்.

“2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த திட்டத்தின் செலவினங்களை கணிசமாக குறைப்பதற்கு பல முனைகளிலும் ஆய்வுகள் செய்தோம். பல மாற்றங்கள் செய்து சில வழித்தடங்களை மாற்றி அமைத்தோம். இரயில் நிலையங்களின் அமைப்பையும் மாற்றி அமைத்தோம். இரு நாட்டு அரசாங்கங்கள் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமுகமான தீர்வை காணவில்லை என்பதால் இந்தத் திட்டத்தை மேலும் தொடர வாய்ப்பில்லை” என்றும் முஸ்தாபா முகமட் குறிப்பிட்டார்.

சிங்கை மலேசியா துரித ரயில் திட்டம் நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 2010 பொருளாதார உருமாற்றத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2018-இல் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.