பிரேசர் மலை : ஜாலான் ரவுப்பிலிருந்து பிரேசர் மலைக்குச் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்தப் பாதிப்பினால் 13 வாகனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) பிற்பகலில் இந்த நிலச் சரிவு ஏற்பட்டது.
அந்தப் பாதையில் 2-வது கிலோமீட்டரிலும், 4-வது கிலோ மீட்டரிலும் ஏற்பட்ட நிலச் சரிவு காரணமாக வாகனங்கள் நகர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் ரவுப் காவல் நிலையத் தலைவர் (ஓசிபிடி) ஆணையர் காமா அசுரால் முகமட் தெரிவித்திருக்கிறார்.
இதுவரையில் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் காவல் துறையினராலும், அங்குள்ள உள்ளூர் வாசிகளாலும் காப்பாற்றப்பட்டு பிரேசர் மலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
முதலில் பெண்களும் குழந்தைகளும் அந்த இடத்திலிருந்து காப்பாற்றப்பட்டு வருவதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுப் பணி இலாகாவும், சாலைகளைச் சுத்தப்படுத்தும் கோலகுபுபாரு (சிலாங்கூர்) பணியாளர்களும் நிலச் சரிவினால் ஏற்பட்ட சேதங்களை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் ஜாலான் ரவுப் – புக்கிட் பிரேசர் சாலைப் பகுதியில் மூன்று இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.