சென்னை, ஜனவரி 16 – சென்னை என்றவுடன் மெரினாவிற்கு அடுத்ததாக நம் நினைவிற்கு வரும் பல முக்கிய அம்சங்களுள் சத்யம் திரையரங்குகளும் ஒன்று. சென்னையில் உள்ள பெரும் வர்த்தக மையங்களில் நவீன திரை அரங்குகள் பல வந்தாலும், படம் பார்க்க பொது மக்கள் மட்டுமின்றி பல நட்சத்திரங்களின் தேர்வாக சத்யம் குழுமம் திகழ்ந்து வருகின்றது.
தமிழகத்தில் சத்யம் குழுமத்திற்கு 50-க்கும் மேற்பட்ட நவீன திரை அரங்குகள் உள்ளன. சென்னையில் மட்டும் சத்யம், எஸ்கேப், லக்ஸ், எஸ்2 பெரம்பூர், எஸ் 2 தியாகராஜா போன்ற அரங்குகள் உள்ளன. இந்நிலையில் சத்யம் குழுமத்தை மற்றொரு முன்னணி நிறுவனமான பிவிஆர் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்யம் திரை குழுமத்திற்கு சுமார் 1000 கோடி ரூபாய் வரை தருவதற்கு பிவிஆர் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. பிவிஆர் குழுமத்திற்கு இந்தியாவில் உள்ள 43 முக்கிய நகரங்களில் மொத்தம் 454 திரை அரங்கங்கள் உள்ளன. மிகப் பெரும் நிறுவனம், சுமார் 50 திரை அரங்குகள் கொண்ட ஒரு நிறுவனத்தை வாங்கக் காரணம், அதன் வர்த்தகம்.
சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலான பார்வையாளர்களின் விருப்பமாக சத்யம் திரை குழுமம் உள்ளது. ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் 3 மில்லியன் பார்வையாளர்களை சத்யம் திரை அரங்குகள் ஈர்க்கின்றன.
சத்யம் குழுமத்தை பிவிஆர் வாங்கும் பட்சத்தில், பெரும் இலாபம் ஈட்டும் தமிழக வர்த்தகமும் பிவிஆர் குழுமத்தையே சேரும். எனினும் இந்த வர்த்தகம் குறித்து இரு நிறுவனங்களும் மௌனம் சாதித்து வந்தன.
பிவிஆர் மறுப்பு:
சத்யம் திரையரங்குகளை பிவிஆர் நிறுவனம் வாங்க இருப்பதாக பத்திரிக்கைகள் தொடர் செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில், பிவிஆர் நிறுவனம் சமீபத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிவிஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தொழில்முறை வளர்ச்சி வாய்ப்புகளை மனதில் வைத்து, எங்கள் நிறுவனம் பல வர்த்தக முன்னேற்பாடுகளை செயல்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக பலருடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றோம். ஆனால் சத்யம் திரையரங்குகள் வாங்குவது குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை யாருடனும் நடத்தப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.