சென்னை, அக்டோபர் 21 – விஜய் நடிப்பில் தீபாவளித் திரையீடாக வெளிவரும் ‘கத்தி’ படம் வெளியாகவிருந்த ‘சத்யம்’ மற்றும் உட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தத் திரையரங்குகளின் முகப்பு வாயில் கண்ணாடிகள் சேதமுற்றன.
தாக்குதலில் சேதமுற்ற சத்யம் திரையரங்கு
கத்தி படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் வர்த்தகத் தொடர்புகள் உள்ளன என்ற காரணத்தால் அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என பல தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி கூட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கத்தி தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.
ஆனால் படத்தை வெளியிடுவதற்கான முழு முயற்சிகளை படதயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து செய்து வந்தது. தமிழ் அமைப்புகள் பிரதிநிதிகளுடன் தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டு திட்டமிட்டப்படி நாளை படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு ஆட்டோவில் வந்த கும்பல் ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டர் மற்றும் உட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
சத்யம் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
உருட்டு கட்டை மற்றும் கற்களால் தாக்கி வாயில் கண்ணாடிகளை உடைத்தனர். மர்ம கும்பல் தாக்குதலில் இரண்டு திரையரங்குகளும் சேதம் அடைந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்திய சென்னை காவல் துறையினர், சத்யம் திரையரங்கில் தாக்குதல் நடத்திய கும்பல் யார் என்று அங்குள்ள கண்காணிப்பு புகைப்படம் எடுக்கும் கருவி மூலம் (கேமரா) கண்டறிந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளதாக தமிழகப் பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை அடையாளம் கண்டு, காவல் துறையினர் இன்று காலை கைது செய்தனர். இவர்களைத் தவிர, மேலும் சிலரையும் காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.