Home இந்தியா மருத்துவ ஆராய்ச்சிக்கு முன்னுரிமை: எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவில் மோடி வேண்டுகோள்!

மருத்துவ ஆராய்ச்சிக்கு முன்னுரிமை: எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவில் மோடி வேண்டுகோள்!

628
0
SHARE
Ad

MODIபுதுடெல்லி, அக்டோபர் 21 – மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சிக்கு மருத்துவ மாணவர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்களுக்கு அந்தஸ்து கொடுத்துள்ள இந்த சமூகத்துக்கு பிரதிபலனாக இதை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மோடி பேசியதாவது:

“இதுபோன்ற கல்வி நிறுவனத்தில் படித்த நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த தாய் நாடு, சமூகம் உங்களுக்கு கொடுத்துள்ள இந்த மிகச் சிறந்த வாய்ப்புக்கு பிரதிபலனை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள். எனக்கு உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.”

#TamilSchoolmychoice

“எய்ம்ஸ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 40 சதவீத மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதாக அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்தார். பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க வேண்டியதை திருப்பி, கல்விக்காக ஒதுக்குகிறோம். கல்வி தந்த இந்த நாட்டுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏன் இவர்கள் நினைப்பதில்லை.”

“நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அது மற்றவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு நமக்கு அளிக்கப் பட்டதாகவே கருத வேண்டும்.  நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்காக ஏதாவது ஒரு வகையில் தியாகம் செய்திருப்பார்கள்.”

“இதை நாம் நினைத்து பார்த்தாலே, அவர்களுக்கு பிரதிபலன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பழக்கமாகிவிடும். இந்திய மருத்துவர்களுக்கு அனைத்துலக நாடுகளில் மிகுந்த மரியாதை உள்ளது. மிகுந்த திறமையானவர்கள் இந்திய மருத்துவர்கள் என்ற பெருமை நமக்கு உள்ளது”.

“அதே நேரத்தில் மருத்துவ ஆராய்ச்சியில் நாம் பின்தங்கியுள்ளோம். மருத்துவ ஆராய்ச்சிக்கு நீங்கள் முக்கியத்துவம் தரவேண்டும். குறிப்பாக நோயாளிகளின், நோயின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.”

“நோயின் வரலாறு, அதற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகிய தகவல்களை திரட்ட வேண்டும். அதில் ஆய்வு செய்ய வேண்டும். உங்களுக்குள் இருக்கும் மாணவனை விட்டுவிடாதீர்கள்.”

“நான்கு சுவர்கள் கொண்ட வகுப்பறையில் இருந்து, மிகப் பெரிய பரந்து விரிந்த திறந்த வகுப்பறையான உலக வாழ்க்கைக்கு செல்கிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் மாணவன் தொடர்ந்தால், உங்களுக்கு தனி சக்தி கிடைக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மிகவும் சிறப்பு விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதாவது கிராமத்தில் இருக்கும் ஏழை, எளிய மாணவர்களை அழைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் ஒரு புதிய வேகம் பிறக்கும்.”

“நாமும் இதுபோல் வர வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்கு என்னை எதற்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் மருத்துவரும் இல்லை, சிறந்த நோயாளியும் இல்லை. பிரதமர் என்பதால் அழைத்திருப்பார்கள். இது இந்த நாட்டின் துரதிருஷ்டம். என்னைப் போன்ற அரசியல்வாதிகள் நாடெங்கும் உள்ளனர் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார் மோடி”.