சென்னை – பெங்களூர் மற்றும் சென்னை நகர்களில் உள்ள பிவிஆர் திரையரங்குகளில் இனி தமிழ்ப் படங்களைத் திரையிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட பிவிஆர் திரையரங்கில் இருந்துதான் சில தமிழ்ப் படங்கள் திருட்டுத் தனமாக (திருட்டு விசிடி) பதிவிறக்கங்கள் செய்யப்படுவதால்தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.
இது குறித்துத் தாங்கள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவிடம் புகார் கொடுத்தும் இதுவரை முறையான பதில் இல்லை என்றும் இன்று மாலை சென்னையில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷால் கூறியுள்ளார்.
அவருடன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜாவும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
விஷால் நடிக்கும் ‘மருது’ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.