சென்னை – நாம் சற்றே பின்னோக்கிப் பார்த்து நினைவு கூர வேண்டிய ஒரு காட்சி!
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில்தான் நடிகை மனோரமா காலமானார். மனோரமா இல்லத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தார் அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.
மனோரமாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போது சந்திக்க அணுகினார் சரத்குமார். ஆனால், ஜெயலலிதாவோ, அவரைத் தவிர்த்து விட்டு காரில் ஏறிச் செல்லும் காட்சிகளை தொலைக்காட்சிகள் அடிக்கடி அப்போது காட்டின. ஜெயலலிதாவால் மூக்குடைபட்ட சரத்குமார் பின்னர், நடிகர் சங்கத் தேர்தலிலும் தோல்வியடைந்தார்.
காலம் சுழன்றது. கடந்த தேர்தலில் அதிமுக அணியில் போட்டியிட்ட மக்கள் சமத்துவக் கட்சியின் தலைவருமான சரத்குமாரை மீண்டும் இந்த முறை ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் போட்டியிட தொகுதி ஒதுக்காமல் புறக்கணித்தார். ஆனால், திடீரென்று மனம் மாறி இறுதிநேரத்தில் சரத்குமாரை அழைத்து ஒரே ஒரு தொகுதி ஒதுக்கினார். சரத்குமாருக்கு நாடார் சமூக வாக்குகள் ஆதரவு உண்டு என்பது இந்த மனமாற்றத்துக்கான பின்னணியாகப் பார்க்கப்பட்டது.
சரத்குமாரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து விட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட திருச்செந்தூர் நோக்கிப் பயணமானார். ஆனால் அங்கு அவரை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டவரோ அனிதா இராதாகிருஷ்ணன். இவரே இத்தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர். முன்பு அதிமுகவில் இருந்து பின்னர் திமுகவில் இணைந்தவர்.இதனால், பலம் வாய்ந்த இவரை எதிர்த்து நிற்பதால், கடுமையான சவாலை எதிர்நோக்குகின்றார் சரத்குமார்.
நிலைமை அனிதாவுக்கே சாதகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து திருச்செந்தூரிலும் தோல்வி தொடர்கதையாகுமா?
அல்லது திருச்செந்தூர் முருகன் மகிமையால் – ஜெயலலிதா தந்த வாய்ப்பால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றியடைவாரா?
கடுமையானப் பிரச்சாரங்களுக்குப் பின்னர் காத்திருக்கின்றனர் திருச்செந்தூர் மக்கள்!
-செல்லியல் தொகுப்பு