கோலாலம்பூர், ஜனவரி 30 – 2015-ல் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவினால், மலேசிய பொருளாதாரம் திட்டமிட்டதைக் காட்டிலும் பல மடங்கு சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாகத்தான், கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்விற்குட்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவில் எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் மலேசியா, 2015-ம் ஆண்டில் 5 முதல் 6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய்யில் ஏற்பட்ட திடீர் சரிவின் காரணமாக, கடந்த சில மாதங்களாக, பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவுகள் ஏற்படத்துவங்கி உள்ளன. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கணிக்கப்பட்டதை விட குறைவான வளர்ச்சியையே எட்டும் என்று கூறப்படுகிறது.
வருவாய் குறைவின் காரணமாக ரிங்கிட் மதிப்பு, அமெரிக்க டாலர்களை விட 10 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார மந்த நிலையை கையாள முடியும் என பிரதமர் நஜீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“பொருளாதார நிலையை மலேசிய அரசு மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. நமக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஒன்றும் இல்லை. எனினும், அது போன்ற சூழல் ஏற்படா வண்ணம் நாம் தேவையான முன்கூட்டிய நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மற்ற நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால், மலேசியாவில் அதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், நாம் நியாயமான வளர்ச்சியை எட்டுவதற்கு சிறிது போராட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 100 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது மறுமதிப்பீட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியிலான வெளிநாட்டு பயணங்கள், இராணுவ திட்டங்கள் மற்றும் இதர நடவடிக்கைகள் அனைத்தும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குள்ளாகவே நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.