கோவை, ஜனவரி 21 – அமெரிக்க நிறுவனம் காந்தி பெயரில் ‘பீர்’ விநியோகம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவையில் ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில் அவர் படத்துடன் கூடிய செருப்பு தயாராகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து ப்ரூவிங் என்ற மதுபான நிறுவனம், சமீபத்தில் ‘காந்தி பாட்’ என்ற புதிய வகை ‘பீர்’ பாட்டில் ஒன்றை அறிமுகம் செய்தது. அதில் காந்தியின் புகைப்படத்தையும் அச்சிட்டு வெளியிட்டது.
இதையடுத்து அந்த அமெரிக்க நிறுவனத்தின் மீது கடும் கண்டனம் கிளம்பியதோடு, காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
ஆனால் இதற்கு அந்த நிறுவனம் மன்னிப்பு கோரிய போதும், அந்த பீர் பாட்டிலில் காந்தி படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் தந்தை என அழைக்கப்படும் ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ படத்துடன் கூடிய செருப்பை தயாரிக்கும் பணியில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராமசுப்பிரமணியம் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் கூட அந்த நிறுவனம் காந்தியடிகளின் படத்தை ‘பீர்’ பாட்டிலில் இருந்து அகற்றவில்லை.
காந்தி பெயரில் அவர் படத்தை போட்டு ‘பீர்’ பாட்டில் கொண்டு வந்ததற்கு பதிலாக ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில் செருப்பு தயாரிக்க யோசனை வந்தது. இதையடுத்து தற்போது ஒரு நிறுவனத்தில் செருப்பு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இன்னும் சில நாட்களில் தயாராகி விடும் இதனை அமெரிக்க அதிபர், துணை அதிபர், ஸ்பீக்கர்கள், 50 மாகாண கவர்னர், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பவுள்ளோம்.
மேலும், இந்த செருப்பை பெரிய வடிவத்தில் தயார் செய்து ஒபாமா இந்தியாவிற்கு வருகை தரும் 26-ஆம் தேதி டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் முன் வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.