ஜனவரி 21 – இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. இது கீரை இனத்தைச் சார்ந்தது. இதை மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும், உண்டோர்க்கு நல் மருந்தாகவும் விளங்குகிறது.
வெந்தய விதைகளும் இதைப் போலவே உணவாகவும் மருந்தாகவும் நமக்குப் பயன் தருகிறது. இது சிறிது கசப்பு, கார்ப்பு, குளிர்ச்சி ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ளது. வெந்தயக் கீரை குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது.
சிறுநீரைப் பெருக்கும் தன்மை வாய்ந்தது, உள்ளார்ந்த வீக்கத்தையும், உஷ்ணத்தையும் போக்க கூடியது. வற்றச்செய்யும் தன்மையுடையது, இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
வறட்சித் தன்மையை அகற்றக் கூடியது, காம உணர்வைப் பெருக்கக் கூடியது, அகட்டு வாய்வு அகற்றி, உடலுக்கு உரமாவது. வெந்தயத்தின் விதைகள் பசியின்மையை போக்க வல்லது.
வயிற்று உப்புச்சத்தைப் போக்க வல்லது, பித்தத்தை சமன்படுத்த வல்லது, வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது, வயிற்றுப் போக்கையும் போக்கும்.
சீதபேதியை நிறுத்த வல்லது, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தைத் தணிக்க வல்லது, ஜெர்மானிய மருத்துவ வல்லுனர்கள் வெந்தயம் உடலில் எப்பாகத்திலும் சளித்தன்மையை அதிகரிக்க வல்லது, மேலும் ரத்த ஓட்டத்தைத் தூண்டக் கூடியது, சீழ்பிடிப்பதைத் தடுக்கக் கூடியது என்று உறுதி செய்துள்ளது.
உலக ஆரோக்கியக் குழுமம், வெந்தயம் சர்க்கரை நோய்க்கு ஒரு துணை மருந்தாகிறது, உணவு ஏற்றுக் கொள்ளாமை, கொழுப்புச் சத்து மிகுதல் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது என்று தெரிவித்துள்ளது.
வெந்தயத்தை அரைத்து மேல் பூச்சாகப் பூசுவதால் “எக்ஸிமா” எனப்படும் தோல் நோய், தீப்புண்கள், சீழ்பிடித்த கட்டிகள் மற்றும் மூட்டுகளில் வாதநீர் கோர்த்து வீக்கம் ஆகியன குணமாகின்றன.