மதுரை, ஜனவரி 22 – ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வளர்மதியும், தி.மு.க. வேட்பாளராக ஆனந்த்தும் களமிறக்கப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி இத்தொகுதியில் போட்டியிடப் போவதாக முதலில் அறிவித்தது.
ஆனால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியோ இடைத்தேர்தல் என்பதே தேவை இல்லாதது; நாங்களும் போட்டியிடவில்லை. யாரையும் ஆதரிக்கவும் இல்லை என்று அறிவித்தது.
அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க., பாரதிய ஜனதாவின் அறிவிப்பால் அதிருப்தியில் இருந்தது. இதனால் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் திடீரென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்” என்று அறிவித்தார்.
இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ம.தி.மு.க., ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, “ஸ்ரீரங்கம் தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடாது; அத்துடன் எந்த கட்சி வேட்பாளரையும் ஆதரிக்கவும் மாட்டோம்” என்று கூறியுள்ளார்.