கோலாலம்மபூர், ஜனவரி 22 – சங்கப்பதிவதிகாரியின் உத்தரவை எதிர்த்து மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குமார் அம்மான் வியாழக்கிழமை மேற்கொள்ளவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மஇகா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ வேள்பாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
குமார் அம்மானின் இத்தகைய நடவடிக்கையால் சங்கப்பதிவிலாகா உத்தரவு தொடர்பில் கட்சியில் ஏற்பட்டுள்ள நிலையை மேலும் ஒரு குழப்பமான, ஒழுங்கற்ற நிலைக்குக் கொண்டு செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து, தான் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அரசாங்கத்திற்கு எதிராகவே போராட்டம் நடத்துவதற்கு, இதுவரை மஇகா வரலாற்றில் எந்தவொரு தேசியத் தலைவரும் அனுமதி வழங்கியதில்லை.”
“தற்போதைய நிலையில் இரண்டு சாத்தியக் கூறுகளே உள்ளன. ஒன்று, மஇகா மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராகச் செயல்பட டத்தோஸ்ரீ பழனிவேல் திட்டமிட்டுள்ளார். மற்றொன்று,அவர் கட்சி மற்றும் தன் ஆதரவாளர்கள் மீதான பிடியை முழுவதுமாக இழந்துவிட்டார் என்பதே அவ்விரு சாத்தியக் கூறுகள்,” என்று வேள்பாரி மேலும் கூறியுள்ளார்.
அரசாங்க அமைப்பான சங்கப்பிதிவிலாகா, மறுதேர்தல் நடத்தப்படும் வரை மஇகா தலைமைத்துவத்தில் செய்யப்படும் எத்தகைய மாற்றங்களையும் அங்கீகரிக்கப் போவதில்லை என தெளிவாகக் கூறிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், நடப்புச் சம்பவங்களும், அரசாங்க அமைப்புக்கு எதிரான மஇகா தேசியத் தலைவரின் செயல்பாடுகளும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.