கோலாலம்பூர், ஜனவரி 22 – மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பிஐஓ (PIO) அட்டைகள், இனி ஆயுட்காலம் வரை செல்லுபடியாகும் என கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அளித்த உறுதிமொழியின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இனி பிஐஓ மற்றும் ஓசிஐ (OCI-வெளிநாட்டுவாழ் இந்திய குடிமக்கள்) அட்டைகள் இரண்டும் ஒரே மதிப்புடன் இருக்கும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இனிமேல் பிஐஓ அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட இத்தகைய அட்டைகள் இனி ஓசிஐ அட்டைகளாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், பிஐஓ அட்டை வைத்திருப்பவர்கள் தூதரகத்திற்கு வந்து அவற்றை ஆயுட்காலத்திற்கும் செல்லுபடி ஆவதற்கான முத்திரையை பெற்றுச் செல்லலாம் என கூறியுள்ளது.
இரு அட்டைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 9ஆம் தேதி முதல் புதிதாக பிஐஓ அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவழியினர் ஓசிஐ அட்டைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இதற்கான விண்ணப்பம் https://passport.gov.in/oci/. என்ற அகப்பக்கத்தில் கிடைக்கும்.
இணையம் வழி இந்த விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய துணை ஆவணங்களுடன் இந்திய தூதரகத்தில் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கான இணையதளத்தையும் அணுகலாம்.